மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, ரோஹித் சர்மாவும், ஆஸ்திரேலியா ஒருநாள் தொடருக்குபின் ஓய்வு பெற பிசிசிஐ அழுத்தம் கொடுத்து வருவதாக செய்திகள் வெளியானது. இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஏனென்றால் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் 2027 உலக கோப்பை தொடரில் விளையாட முடிவெடுத்திருந்தார்கள். அப்படி ஒருவேளை இருவரும் விளையாடினால் கோலிக்கு 39 வயதாகும், ரோகித் சர்மாவுக்கு 40 வயதாக இருக்கும்.

இதனை காரணம் காட்டி, இந்த இரண்டு வீரர்களையும் ஆஸ்திரேலியா தொடருடன் அனுப்ப பிசிசிஐ முடிவெடுத்து இருப்பதாக செய்திகள் வெளியானது. இதற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்ப்பு எழுந்தது. இது குறித்து கருத்து தெரிவித்திருந்த கங்குலி, இருவரும் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பான ரெகார்டுகள் வைத்திருப்பதால் இருவரும் எப்போது முடிவெடுக்கிறார்களோ அப்போதுதான் செல்ல வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
இந்த சூழலில் தற்போது பிசிசிஐ தரப்பில் முக்கிய விளக்கம் ஒன்று அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் விராட் கோலிக்கும் ரோகித் சர்மாவுக்கும் ஓய்வு தொடர்பாக ஏதேனும் ஐடியா இருந்தால் நிச்சயமாக அவர்கள் பிசிசிஐயின் மூத்த அதிகாரிகளிடம் பேசி இருப்பார்கள். இங்கிலாந்து தொடருக்கு முன்பு அவ்வாறு தான் நடந்தது. தற்போது இந்திய அணியை பொறுத்தவரை அடுத்த மிகப்பெரிய தொடர் என்றால் டி20 உலக கோப்பை தான்.
இதற்கு தயாராகும் பணியில் தான் பிசிசிஐ கவனம் செலுத்துகிறது. தவிர ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர்பாக எந்த ஒரு முடிவையும் பிசிசிஐ தற்போது எடுக்கவில்லை. பிசிசிஐ முதல் பணி ஆசிய கோப்பைக்கு சிறந்த அணியை தயார் செய்வது மட்டும்தான். அக்டோபர் 25ஆம் தேதி இருவருக்கும் பிரியா விடை அளிக்க பிசிசிஐ நடவடிக்கை எடுத்திருப்பதாக வெளிவந்த செய்தியில் துளியும் உண்மை இல்லை.
விஜய் ஹசாரே கோப்பையில் விளையாட முடிவும். அவர்கள் கையில் தான் இருக்கின்றது. இந்த தொடருக்கு முன்பே ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு இடையிலான ஒரு நாள் தொடர் நடைபெறும். அதனை தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிராக மூன்று ஒரு நாள் போட்டிகளும் நடைபெறும்.இதிலும் அவர்கள் பங்கேற்பார்களா வேண்டாமா என்ற முடிவை அந்த இரண்டு வீரர்களும் தான் எடுப்பார்கள் என பிசிசிஐ தரப்பு தெரிவித்து இருக்கின்றது.