மும்பை : இந்திய கிரிக்கெட் அணியில் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பை தொடர் நடைபெறுவதால் அந்தத் தொடர் முழுவதும் டிராவிட் பயிற்சியாளராக செயல்பட ஒப்புக் கொண்டுள்ளார்.
அதன் பிறகு புதிய பயிற்சியாளருக்கான தேடும் பணி நடைபெறும் என்று பிசிசிஐயின் செயலாளர் ஜெய் சார் தெரிவித்துள்ளார். இது குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய ஜெய்ஷா புதிய பயிற்சியாளர்களுக்கான தேடும் பணி விரைவில் நடைபெறும்.

இதற்கான விளம்பரத்தை பிசிசிஐ வெளியிட உள்ளது. ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் ஜூன் மாதத்துடன் முடிவடைகிறது. அவர் மீண்டும் பயிற்சியாளராக தொடர விரும்பினால் அவரும் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார். இதேபோன்று ஒரு காலத்தில் இந்திய அணி பயிற்சியாளராக வெளிநாட்டு முன்னாள் வீரர்கள் பலர் இருந்தனர்.
முன்னாள் தென்னாபிரிக்கா வீரர் கேரி கிறிஸ்டன் பயிற்சியாளராக இருந்தபோதுதான் இந்திய அணி 2011 உலக கோப்பையை வென்றது. அதன் பிறகு முன்னாள் இங்கிலாந்து வீரர் டங்கன் பிளட்ச்சர் பயிற்சியாளராக சில காலம் இருந்தார். இதனை அடுத்து அணில் கும்ப்ளே, ரவி சாஸ்திரி என தொடர்ந்து இந்திய பயிற்சியாளர்கள் தான் இந்திய அணியை வழி நடத்தி வந்தனர்.
2021 ஆம் ஆண்டு டி20 உலக கோப்பை முடிவடைந்த உடன் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பதவியேற்றார். டிராவிட் தலைமையில் இந்திய அணி 50 ஓவர் உலகக் கோப்பை இறுதிப்போட்டி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி, 2022 டி20 உலக கோப்பை அரையிறுதிப்போட்டி வரை சென்ற நிலையில் ஆசிய கோப்பை தொடரை வென்றது.
இந்த நிலையில் இந்திய அணியில் புதிய பயிற்சியாளர் இந்தியாவை சேர்ந்தவரா இல்லை வெளிநாட்டு வீரரா என்பது குறித்து கேள்விக்கு பதில் அளித்த ஜெய்ஷா தற்போது எதையும் கூற முடியாது. ஆனால் பிசிசிஐ என்பது ஒரு சர்வதேச அமைப்பு போல் செயல்படுகிறது. பயிற்சியாளரை பிசிசிஐக்கு ஆலோசனை வழங்கும் குழு தான் தேர்வு செய்யும் என்று கூறியுள்ளார்.
மேலும் டெஸ்ட்க்கு தனிப் பயிற்சியாளர், ஒரு நாள், டி20க்கு தனி பயிற்சியாளர் வர வாய்ப்பு இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெய்ஷா இந்திய அணியில் விராட் கோலி, ரோகித் சர்மா, ரிஷப் பண்ட் போன்ற வீரர்கள் மூன்று வகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட கூடியவர்கள்.இதனால் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொரு பயிற்சியாளர் நியமிக்கும் தேவை தற்போது இந்தியாவில் இல்லை என்றும் ஜெய்ஷா கூறியுள்ளார்.