
உலகக் கோப்பை தொடர்
ஐபிஎல் தொடர் முடிந்து சில நாட்கள் இடைவெளியிலேயே உலகக் கோப்பை டி20 தொடர் தொடங்குகிறது. அதில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை வரும் அக்டோபர் 24ஆம் தேதி எதிர்கொள்கிறது. ஐபிஎல் தொடரே நீண்ட காலம் நடைபெறும் ஒரு தொடராகும். அது முடிந்த சில நாட்களில் உலகக் கோப்பை டி20 தொடரும் தொடங்குவது வீரர்களின் பளுவை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. மேலும், ஐபிஎல் தொடரில் முக்கிய வீரர்கள் யாரெனும் காயமடைந்தால் அதுவும் கூட எல்லா நாடுகளுக்கும் மிகப் பெரிய பிரச்சினையாகும்.

வருண் சக்கரவர்த்தி
இந்திய கிரிக்கெட் அணியும் இப்போது அதேபோன்ற ஒரு பிரச்சினையைத் தான் எதிர்கொண்டுள்ளது. தற்போது கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் வருண் சக்கரவர்த்தி டி 20 கிரிக்கெட்டில் ஒரு சக்திவாய்ந்த ஆயுதமாகவே இருப்பார் என்று கருதப்படுகிறது. வலது கை சுழற்பந்து வீச்சாளரான வருண் சக்கரவர்த்தி, தனது வெரியேஷன்கள் பந்துவீச்சின் மூலம் விக்கெட்களை எடுப்பதில் வல்லவர். மேலும் சிக்கனமாகப் பந்து வீசி, ரன்களையும் இவரால் கட்டுப்படுத்த முடியும். ஆனால், இவரது ஃபிட்னஸ் குறித்து பிசிசிஐ தற்போது கவலை தெரிவித்துள்ளது.

முழங்கால் காயம்
டி 20 உலகக் கோப்பைக்கு முன், வருண் சக்கரவர்த்தியின் முழங்காலில் ஏற்பட்டுள்ள காயம் நல்ல நிலையில் இல்லாதது, பிசிசிஐ நிர்வாகத்திற்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. வருண் சக்கரவர்த்திக்கு முழங்காலில் ஏற்பட்டுள்ள காயத்தில் வலி தொடர்வதாக பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. டி 20 உலகக் கோப்பைக்குப் பதில் வேறு எதாவது தொடர் இருந்திருந்தால், வருண் சக்கரவர்த்திக்கு நிச்சயம் ஓய்வு அளிக்கப்பட்டிருக்கும் என்றும் டி20 உலகக் கோப்பை இருப்பதாலேயே ரிஸ்க் எடுக்கிறோம் என்றும் பிசிசிஐ-இல் இருக்கும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

திட்டம் என்ன
வருண் சக்கரவர்த்தி மீண்டும் முழு உடற்தகுதிக்குத் திரும்பு நீண்ட ஒரு பிரேக் தேவைப்படலாம் என்றும் ஆனால், பிசிசிஐயின் கவனம் இப்போது அடுத்து வரும் டி 20 உலகக் கோப்பையில் அவர் ஆடுவதை உறுதி செய்வதே என்று அந்த அதிகாரி தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில், "வருணின் முழங்கால்கள் நல்ல நிலையில் இல்லை. அவர் வலியில் இருக்கிறார். டி 20 உலகக் கோப்பையில் இல்லாவிட்டால் ஒருவேளை இந்திய அணி நிர்வாகம் கூட அவருக்கு ஓய்வு அளித்திருக்கும். 100 சதவிகிதம் ஃபிட்டாக இருக்க, அவருக்கு விரிவான ஒரு ஓய்வு தேவைப்படலாம். ஆனால் இப்போது அவர் டி 20 உலகக் கோப்பையில் ஆட வேண்டும் என்பதிலேயே இப்போது அனைவரது கவனமும் உள்ளது" என்றார்.

வலி நிவாரணி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நிர்வாகம் வருண் சக்கரவர்த்தியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அட்டவணையைத் தயார் செய்துள்ளனர். அவர் ஒவ்வொரு போட்டியிலும் எவ்வித சிரமமும் இன்றி 4 ஓவர்கள் வீசுவதை உறுதி செய்யும் வகையில் அவருக்கு வலி நிவாரணிகள் கூட வழங்கப்படுகிறது. இது குறித்து அந்த பிசிசிஐ அதிகாரி கூறுகையில், "எனக்குத் தெரிந்தவரை, கே.கே.ஆரின் ஊழியர்கள் வருணுக்கு ஒரு விரிவான திட்டத்தைத் தயாரித்துள்ளனர். அவருக்கு வலி நிவாரண ஊசி போடப்படுகிறது. இதனால் அவர் தனது நான்கு ஓவர்களை அதிக சிரமமின்றி வீச முடியும்" என்று அவர் தெரிவித்தார். வருண சக்கரவர்த்தி இந்த ஆண்டு 15 போட்டிகளில் விளையாடி மொத்தம் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.


Click it and Unblock the Notifications