IND vs ENG: நீதான்யா கேப்டன்.. பென் ஸ்டோக்ஸ் செய்த சம்பவம்.. மிரண்டு போன இந்திய அணி
மான்செஸ்டர்: மான்செஸ்டரில் நடைபெற்று வரும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தனது ஆல்ரவுண்டர் திறமையால் புதிய சரித்திரத்தை எழுதியுள்ளார். ஒரே போட்டியில் சதமும் அடித்து, 5 விக்கெட்டுகளையும் கைப்பற்றி கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.
முதலில் பந்துவீச்சில் அசத்திய பென் ஸ்டோக்ஸ், 8 வருடங்களுக்குப் பிறகு டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியின் ரன் குவிப்பிற்குத் தடை போட்டார். இதனைத் தொடர்ந்து பேட்டிங்கில் களமிறங்கிய அவர், சுமார் இரண்டு வருடங்களுக்குப் பிறகு தனது 14வது டெஸ்ட் சதத்தைப் பதிவு செய்தார். நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவர், 198 பந்துகளில் 141 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

இந்த அபார ஆட்டத்தின் மூலம், டெஸ்ட் கிரிக்கெட்டில் பல அரிய சாதனைகளை பென் ஸ்டோக்ஸ் நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்டில் 7000 ரன்கள் மற்றும் 200 விக்கெட்டுகள்
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 7000 ரன்களுக்கு மேலும், 200 விக்கெட்டுகளுக்கு மேலும் எடுத்த மூன்றாவது வீரர் என்ற இமாலய சாதனையை ஸ்டோக்ஸ் படைத்தார்.
- கேரி சோபர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - 8032 ரன்கள் & 235 விக்கெட்டுகள்
- ஜாக் காலிஸ் (தென்னாப்பிரிக்கா) - 13289 ரன்கள் & 292 விக்கெட்டுகள்
- பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - 7000+ ரன்கள் & 229 விக்கெட்டுகள்*
இந்த ஜாம்பவான்களின் பட்டியலில் தற்போது பென் ஸ்டோக்ஸ் இணைந்துள்ளார்.
ஒரே டெஸ்டில் சதம் மற்றும் 5 விக்கெட் வீழ்த்திய கேப்டன்கள்
அதுமட்டுமல்லாமல், ஒரு டெஸ்ட் போட்டியில் கேப்டனாக சதமும், 5 விக்கெட்டுகளையும் வீழ்த்திய ஐந்தாவது வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். 42 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கேப்டன் இந்த சாதனையை நிகழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.
- டெனிஸ் அட்கின்சன் (வெஸ்ட் இண்டீஸ்) - vs ஆஸ்திரேலியா, 1955
- கேரி சோபர்ஸ் (வெஸ்ட் இண்டீஸ்) - vs இங்கிலாந்து, 1966
- முஷ்தாக் முகமது (பாகிஸ்தான்) - vs வெஸ்ட் இண்டீஸ், 1977
- இம்ரான் கான் (பாகிஸ்தான்) - vs இந்தியா, 1983
- பென் ஸ்டோக்ஸ் (இங்கிலாந்து) - vs இந்தியா, 2025*
பும்ரா வாழ்விலேயே படுமோசமான பவுலிங் ரெக்கார்டு.. இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் செய்த சம்பவம்!
பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி, ஒரு கேப்டனாக முன்னின்று அணியை வழிநடத்திய பென் ஸ்டோக்ஸின் இந்த ஆட்டம், அவரை இந்த தலைமுறையின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக மீண்டும் நிரூபித்துள்ளது. அவரது இந்த வரலாற்று சிறப்புமிக்க செயல்பாட்டால், இங்கிலாந்து அணி இந்த டெஸ்டில் வலுவான நிலையை எட்டியுள்ளது. முதல் இன்னிங்க்ஸில் இங்கிலாந்து அணி 669 ரன்கள் எடுத்தது. 311 ரன்கள் முன்னிலை பெற்றது.


Click it and Unblock the Notifications