மும்பை : நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி முழுமையாக இழந்த நிலையில் தற்போது பலரும் பயிற்சியாளர் கௌதம் கம்பீர் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோரை வறுத்தெடுத்து வருகின்றனர்.
நியூசிலாந்துக்கு எதிரான தோல்வியின் மூலம் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெரும் வாய்ப்பு மிகவும் கடுமையாக மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி வரும் 22ஆம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

இதில் இந்திய அணி எப்படி விளையாடப் போகிறது என்று அச்சம் ரசிகர்கள் மத்தியில் தற்போது இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டனான கவாஸ்கர் பயிற்சியாளர் கம்பீரை கடுமையாக விமர்சித்திருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆஸ்திரேலியாவில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி காத்துக் கொண்டிருக்கிறது.
இந்திய வீரர்களை கம்பீர் சரியான முறையில் வழிநடத்த வேண்டும். இந்திய அணியில் யார் பயிற்சியாளர்களாக இருக்கிறார்கள் என்பதை பாருங்கள். அபிஷேக் நாயர் மற்றும் ரியல் டோசேட் ஆகியோர் இணைந்து டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்கள் அடித்ததை விட கம்பீர் அதிகமாக அடித்திருப்பார். இதனால் கம்பீர் மட்டும்தான் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய வீரர்கள் எப்படி விளையாட வேண்டும் என்பதை சொல்லித் தர வேண்டும்.
அப்படி செய்தால் இந்திய அணி வீரர்கள் நன்றாக விளையாடுவார்கள் என நினைக்கிறேன். எனினும் ஆஸ்திரேலிய மண்ணில் கம்பீரே தடுமாறி இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மண்ணில் கம்பீரின் சராசரி வெறும் 22 ரன்கள் தான். இப்படி இருக்கும் பட்சத்தில் அவர்தான் மற்ற வீரர்களுக்கு எப்படி விளையாட வேண்டும் என்று சொல்லித் தர வேண்டும்.
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் குழு தரத்தை அவர்களுடைய போட்டிகளின் முடிவே சொல்லிவிடும். இலங்கைக்கு எதிராக பல ஆண்டுகள் கழித்து நாம் தோல்வியை தழுவினோம். தற்போது நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரை இழந்திருக்கிறோம். இதுதான் கம்பீர் தலைமையிலான பயிற்சியாளர்களுக்கு குழு செய்த விஷயமாக நான் கருதுகிறேன்.
இந்திய அணியில் முடிவெடுக்க வேண்டும் என்றால் கேப்டன் துணை கேப்டன் மற்றும் பயிற்சியாளர் மூன்று பேரும் இணைந்து தான் செயல்பட வேண்டும். ஆனால் இங்கு தலையில் நடப்பதாக நினைக்கின்றேன் என்று கவாஸ்கர் கூறியுள்ளார்.