2027 உலககோப்பையில் இந்த 36 வயது வீரர் கண்டிப்பாக விளையாடனும்.. பத்ரிநாத் கருத்து
மும்பை: நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில், 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கான இந்திய அணியின் தேர்வில் மூத்த வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் பரிசீலிக்கப்படலாம் என்று முன்னாள் இந்திய வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் தெரிவித்துள்ளார். 36 வயதான புவனேஸ்வர் குமார், நவம்பர் 2022-க்கு பிறகு சுமார் நான்கு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தனது இரண்டாவது பட்டத்தை வெல்ல புவனேஸ்வர் குமார் முக்கிய காரணமாக இருந்தார். அத்தொடரில் 28 விக்கெட்டுகளை வீழ்த்தி, அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.

புவனேஸ்வர் குமாரின் கம்பேக் குறித்து தனது யூடியூப் சேனலில் பேசிய பத்ரிநாத், "நியூசிலாந்து ஆடுகளங்களின் சூழல் அவரது ஸ்விங் பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். இந்திய மைதானங்களிலேயே அவர் பேட்டர்களுக்குக் கடும் சவாலாக இருந்தார். எனவே, இந்தச் சூழலை அவர் மிகச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்."
"அங்கு அவர் தனது திறமையையும் உடற்தகுதியையும் நிரூபித்தால், 2027 ஒருநாள் உலகக்கோப்பைக்கு அவரை நிச்சயமாக பரிசீலிக்கலாம். அதேவேளையில், தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக்கோப்பையில் 10 ஓவர்கள் வீச அவர் தயாராக இருக்கிறாரா என்பதை அணி நிர்வாகம் அவருடன் பேசி உறுதி செய்ய வேண்டும்" என்று கூறினார்.
புவனேஸ்வர் குமார் கடைசியாக ஜனவரி 2022-இல் ஒருநாள் போட்டியில் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து டி20 போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோரே தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்க வேண்டும் என்று பத்ரிநாத் வலியுறுத்தியுள்ளார்.
2026 டி20 உலகக்கோப்பைக்குப் பிறகு சஞ்சு சாம்சனின் ஃபார்ம் சீராக இல்லாததால், வைபவ் சூர்யவன்ஷியைத் தொடக்க வீரராக களமிறக்க வேண்டும் என்று சில ரசிகர்களும் வல்லுநர்களும் கருத்து தெரிவித்து வந்தனர்.சமீபத்தில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக 2-2 என சமனில் முடிந்த டி20 தொடரில், சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா இணை தொடக்க வீரர்களாகக் களம் இறங்கியது.
இதுகுறித்து பேசிய பத்ரிநாத், "மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் சஞ்சு சாம்சன் இரண்டு போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். எனவே, நியூசிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகளிலும் அபிஷேக் சர்மாவுடன் அவரே தொடக்க வீரராகக் களம் இறங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா மற்றும் வைபவ் சூர்யவன்ஷி ஆகிய மூவரும் இடம்பெற்றுள்ளனர்.


Click it and Unblock the Notifications


