மும்பை : 2024 ஆம் ஆண்டின் மிக முக்கிய கிரிக்கெட் தொடராக கருதப்படுவது இந்தியா,ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் போட்டியாகும். ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாட இருக்கிறது.
ஆஸ்திரேலிய மண்ணில் கடைசியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு தொடர்களை வென்றுள்ள இந்திய அணி ஹாட்ரிக் சாதனையை படைக்குமா என்று எதிர்பார்ப்பில் இந்திய ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அணி கடந்த 10 ஆண்டுகளாக பார்டர் கவாஸ்கர் தொடரை வெல்லாததால் இம்முறை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற கங்கணம் கட்டிக்கொண்டு ஆஸ்திரேலிய வீரர்கள் இருக்கிறார்கள்.

இந்த சூழலில் இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஒன்று ஏற்படுத்தியிருக்கிறது.
அதன்படி முதல் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தனிப்பட்ட காரணங்களால் விலகி இருக்கிறார் என்ற செய்திகள் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் ரோஹித் சர்மாவுக்கு பதில் முதல் டெஸ்டில் யார் பங்கேற்க வாய்ப்பு இருக்கிறது என்பதை தற்போது பார்க்கலாம்.
இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் அபிமன்யு ஈஸ்வரன். 29 வயதான இவர் டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு என்று உருவாக்கப்பட்டுள்ள தொடக்க வீரராக இருக்கிறார்.உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளில் அபாரமாக விளையாடி வரும் அபிமன்யூ ஈஸ்வரன் இதுவரை 98 முதல் தர டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 7506 ரன்கள் அடித்திருக்கிறார்.
இதில் 26 சதம்,29 அரை சதம் அடங்கும். அது மட்டுமில்லாமல் துலீப் கோப்பை தொடரில் 2 சதம் மற்றும் இராணி கோப்பை தொடரில் 191ரன்கள் என்று அபிமானி ஈஸ்வரன் பட்டையை கிளப்பி இருக்கிறார். இதனால் இவருக்கு தான் வாய்ப்பு கொடுக்க வேண்டும். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் சிஎஸ்கே வீரர் ருதுராஜ் கெய்க்வாட்.
ருதுராஜ்க்கு நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்கு வாய்ப்பு தேடி வருகிறார். டி20, ஒருநாள் என அனைத்து போட்டிகளிலும் தன்னுடைய திறமையை ருதுராஜ் நிரூபித்தாலும், இன்னும் டெஸ்ட் பக்கம் அவரால் வர முடியவில்லை. இதுவரை 33 முதல் தர போட்டிகளில் விளையாடி 2282 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் ஆறு சதம், 12 அரை சதம் அடங்கும்.
ஸ்டார் வீரர் அணியில் வேண்டும் என்றால் ருதுராஜ்க்கு தான் வாய்ப்பு கிடைக்கும். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்திருப்பவர் சர்பராஸ் கான். டெஸ்ட் கிரிக்கெட்டில் நடுவரிசை வீரராக இருந்தாலும், தொடக்கத்தில் விளையாட அவரை அனுப்பி வைக்கலாம்.
நடுவரிசையில் தற்போது இடம் கிடைக்காத நிலையில், ரோகித் சர்மாவை போல் அவரும் தொடக்க வீரராக களமிறங்க வைத்தால் அது சிறப்பான முடிவாக இருக்கும். சர்பராஸ் கான் இராணி கோப்பை டெஸ்ட் போட்டியில் 222 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.