
ஓப்பனர்களே பலம்
ஐபிஎல் 2021 தொடரின் முதல் பாதியிலும் சரி, இரண்டாம் பாதியிலும் சரி.. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அணி சென்னை சூப்பர் கிங்ஸ். இந்தியாவில் 7 போட்டிகளில் விளையாடி, 5ல் வெற்றிப் பெற்றிருந்தது. 2ல் மட்டுமே தோற்றது. அமீரகத்தில் நடந்த இரண்டாம் பாதியில் முதல் 4 ஆட்டங்களில் வென்று, முதல் அணியாக பிளே ஆஃப் நுழைந்தது. ஆனால் அதன் பிறகு ராஜஸ்தான், டெல்லி, பஞ்சாப் என்று வரிசையாக மூன்று போட்டிகளில் செமத்தியாக அடி வாங்கியது. அணியின் மிடில் ஆர்டரும் ஒவ்வொரு போட்டியிலும் தடுமாறியது. ராயுடு தவிர, மிடில் ஆர்டரில் மற்ற வீரர்களால் சோபிக்கவே முடியவில்லை. குறிப்பாக, மொயீன் அலி, ரெய்னா, தோனி ஆகியோரது பேட்டிங் பற்றி கருத்து கூட சொல்ல முடியாத அளவுக்கு மோசமாக உள்ளது. தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட், டு பிளசி ஸ் சரியாக விளையாடவில்லை எனில் சென்னை அணியால் வெற்றிப் பெற முடியவில்லை.

ரிஷப் பண்ட் தனி வழி
இந்த இக்கட்டான நிலையில் தான், இன்று டெல்லி கேபிட்டல்ஸ் அணியை சென்னை சூப்பர் கிங்ஸ் எதிர்கொள்கிறது. இதில் சென்னை அணியில் சில மாற்றங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, மிடில் ஆர்டரில் உத்தப்பாவுக்கு பதில் ஜெகதீசனுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று தெரிகிறது. அதேபோல், பவுலிங் யூனிட்டில் ஜோஷ் ஹேசில்வுட் நீக்கப்பட்டு அவருக்கு பதில் ஜேசன் சேர்க்கப்படலாம் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேசமயம், டெல்லியும் சென்னை அணிக்கு எதிராக பல வியூகங்களை வகுத்து வருகிறது. அதில் குறிப்பானது, ஓப்பனர்களை விரைவாக அவுட் செய்வது.ஆம்! ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டு பிளசிஸ் ஆகியோரை, பவர் பிளேக்குள் வீழ்த்தி விட வேண்டும் என்பதே டெல்லியின் பிரதான வியூகமாகும். இருவரையும் 6 ஓவர்களுக்குள் அவுட் செய்துவிட்டாலே, சென்னை அணியை 160 ரன்களுக்குள் கட்டுப்படுத்திவிட முடியும் என்பதை டெல்லி நன்கு உணர்ந்து வைத்துள்ளது. இறுதிக் கட்டத்தில் பவுலர்களை விளாசும் அளவுக்கு ஹிட்டர்கள் இல்லை என்பதும் டெல்லி பிளஸ் பாயிண்ட் தான். ஜடேஜா அடித்தால் தான் உண்டு. அவர் அடிக்கவில்லை எனில், கடைசிக்கட்ட ஓவர்களில் ரன்கள் நிச்சயம் வராது.

தரமான பவுலர்கள்
இந்நிலையில், ஆஸ்திரேலிய முன்னாள் ஸ்பின்னர் பிராட் ஹாக், சென்னை அணியால் டெல்லியை நிச்சயம் வீழ்த்த முடியாது என்று சூளுரைத்துள்ளார். இதுகுறித்து அவர் தனது யூடியூபில் பேசுகையில், ""டெல்லி கேபிடல்ஸ் அணி மிகச் சிறந்த அணி என்று கூறுவேன். ஏனென்றால் அவர்கள் இந்த தொடரில் மூன்றாவது சிறந்த அணியை (சிஎஸ்கே எதிர்த்து விளையாடுகிறார்கள் .டெல்லி கேபிடல்ஸ் அணி இன்றைய போட்டியில் சென்னை அணியின் பல பலவீனங்களை வெளிப்படுத்தப் போகிறது. அன்ரிச் நார்ட்ஜே, அவேஷ் கான் போன்ற சிறப்பான பவுலர்கள் தொடக்க ஓவர்களை வீசுகின்றனர். காகிசோ ரபாடா மிடில் ஓவர்கள் வந்து நெருக்கடி கொடுக்கிறார். அதுமட்டுமின்றி, அஷ்வின், அக்ஷர் படேல் எனும் இரு தரமான சுழற்பந்து வீச்சாளர்களும் அந்த அணியின் உள்ளனர்.

ஜெயிக்க வாய்ப்பே இல்லை
"நார்ட்ஜே மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ஃபாஃப் டு ப்ளெசிஸ் மற்றும் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோருக்கு எதிராக, ஷார்ட் பந்துகளை வீசி அவர்கள் இருவரின் பலவீனங்களை வெளிப்படுத்தப் போகிறார்கள். அந்த இரு பவுலர்களும், சென்னை அணியின் தொடக்க வீரர்களை வீழ்த்திவிட்டால், மிடில் ஆர்டர் தானாகவே சரிந்துவிடும். மொயீன் அலி தனது பேட்டிங்கை கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டார். உத்தப்பா மிடில் ஆர்டருக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளவில்லை. ரெய்னா மிடில் ஓவர்களில், ஃபாஸ்ட் பவுலிங்கை விரும்ப மாட்டார். ராயுடுவின் ஃபார்மிலும் எனக்கு நம்பிக்கை இல்லை. தோனியும் சுத்தமாக பேட்டிங்கை மறந்துவிட்டார். அவரால் பந்துகளை கூட தொட முடியவில்லை. மிடில் ஆர்டரில் இருக்கும் இத்தனை தொய்வுகளை ஜடேஜா மற்றும் பிராவோவின் பேட்டிங்கை வைத்து மட்டும் மறைத்துவிட முடியாது. ஒப்பேற்றிவிடவும் முடியாது. ஒட்டுமொத்தமாக, சென்னை அணியால் டெல்லியை வீழ்த்த வாய்ப்பே இல்லை" என்று கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











