வொய்டுக்காக நடுவரிடம் சண்டை போட்ட பிராத்வொயிட்... அப்புறம் ஐசிசி என்ன பண்ணினாங்க தெரியுமா?
லண்டன்: வெஸ்ட் இண்டீஸ் வீரர் கார்லஸ் பிராத்வெயிட்டுக்கு போட்டி ஊதியத்தில் 15 சதவீதம் அபராதத்தை ஐசிசி விதித்திருக்கிறது.
உலக கோப்பை தொடரில் கிட்டத்தட்ட 80 சதவீத ஆட்டங்கள் முடிந்துவிட்டன. அடுத்து வரக் கூடிய நாட்களில் இன்னும் சில ஆட்டங்களே பாக்கி இருக்கின்றன. லீக் தொடரின் 34வது போட்டியில் இந்தியாவும், வெஸ்ட் இண்டீசும் மோதின.
இந்த போட்டியில் இந்திய அணி 125 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. தோல்வி மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது. போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் களம் இறங்கியது.

சர்ச்சையான 42வது ஓவர்
அந்த போட்டியில் 42வது ஓவரை கார்லஸ் பிராத்வெயிட் வீசினார். அந்த ஓவரின் இறுதிப் பந்தை ஹர்த்திக் பாண்டியா எதிர்கொண்டார். வீசப்பட்ட பந்து வொய்டாக நடுவர் அறிவித்தார். மீண்டும் இறுதி பந்து வீசப்பட, அதுவும் வொய்டு என்று நடுவர் கூறினார்.

ஐசிசியிடம் புகார்
அதனால், அதிருப்தியடைந்த பிராத்வொய்ட், நடுவரிடம் முறையிட்டார். பின்னர் போட்டி முடிந்தவுடன், கள நடுவர், கிறிஸ் போர்ட்டிடம் புகார் அளித்தார். அதனை விசாரித்த ஐசிசி, நடுவரின் தீர்ப்புக்கு எதிராக நடந்து கொண்டதாக கூறி, போட்டி ஊதியத்தில் இருந்து 15 சதவீதம் அபராத தொகையாக செலுத்த உத்தரவிட்டது.

அபராதம் விதிப்பு
அபராதத்துடன் ஒரு தகுதியிழப்பு புள்ளியும், பிராத்வொயிட்டுக்கு வழங்கப்பட்டு உள்ளது. அவரின் இந்த செயலுக்கு அதிகபட்சமாக போட்டி ஊதியத்திலிருந்து 50 சதவீதமும், 2 தகுதி இழப்பீட்டு புள்ளிகளும் ஐசிசி வழங்கலாம். ஆனால், குற்றச் சாட்டை பிராத்வெயிட் ஏற்றுக் கொண்டதால் இந்த விவகாரத்தில் ஐசிசி மேற்கொண்டு எவ்வித விசாரணையும் நடத்தவில்லை.

முதல் தடவையல்ல
முன்னதாக, இங்கிலாந்து அணிக்கு எதிராக கடந்த 14ம் தேதி சவுதாம்ப்டனில் நடைபெற்ற போட்டியில் நடுவரிடம் அதிருப்தியை வெளியிட்டார். அந்த குற்றச்சாட்டில், பிராத்வொயிட்டுக்கு ஒரு தகுதி இழப்பீட்டு புள்ளி வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications