வாங்கூவர்: கனடா சூப்பர் 60 என்ற 10 ஓவர் கிரிக்கெட் தொடர் நாளை மிகவும் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. அமெரிக்க கண்டத்தில் உள்ள மிக முக்கியமான மைதானமான பிசி பிளேஸ் என்ற மைதானத்தில் இந்த தொடர் நடைபெற உள்ளது. அக்டோபர் எட்டாம் தேதி முதல் தொடங்கி அக்டோபர் 13-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் மொத்தம் 18 போட்டிகள் நடத்தப்பட உள்ளன.
இந்த தொடரில் இந்திய அணியில் நட்சத்திர வீரர்களான சுரேஷ் ரெய்னா, ஷிகர் தவான், பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக், வங்கதேச வீரர் ஷகிபுல் ஹசன், இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் உள்ளிட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். இந்த தொடரில் கனடா, ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த அகதிகள் உள்ளிட்ட பல வெளிநாட்டு வீரர்களும் இடம் பிடித்துள்ளனர்.

வெறும் கிரிக்கெட் போட்டிகள் மட்டும் அல்லாமல் ஒவ்வொரு நாளும் இசை நிகழ்ச்சி, கலை நிகழ்ச்சி, உணவு திருவிழா என கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு மறக்க முடியாத அனுபவத்தை ஒரே கூரைக்கு கீழ் தர கனடா சூப்பர் 60 ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொடரில் சிறப்பு தூதரான யுவராஜ் சிங், கனடாவில் சூப்பர் 60 தொடர் ஒரு வழியாக நடைபெறுவதை நினைத்தால் மகிழ்ச்சி அளிக்கிறது.
அதுவும் இவ்வளவு புகழ் பெற்ற மைதானத்தில் கிரிக்கெட் நடத்தப்படுவது என்னுடைய ஆர்வத்தை தூண்டுகிறது. இந்த தொடரில் திறமை வாய்ந்த வீரர்கள் பலர் உள்ளனர். ஆடவருக்கு மட்டும் இல்லாமல் மகளிர் பிரிவிலும் கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்படுகிறது. கனடாவில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தினரும், குழந்தைகளும் ரசிகர்களும் ஒன்றிணைந்து கிரிக்கெட்டை மகிழ்ச்சியுடன் பார்க்க வேண்டும்.
இசை நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றேன். இது வெறும் தொடர் மட்டும் கிடையாது. ஒரு திருவிழா போல் உள்ளது என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து பேசிய டொரன்டோ சிக்சர்ஸ் அணியின் கேப்டன் சுரேஷ் ரெய்னா, இந்த தொடரில் நான் இடம் பெற்று இருப்பது மகிழ்ச்சியை தருகிறது. கனடா சூப்பர் 60 போட்டியை எதிர்நோக்கி காத்துக் கொண்டிருக்கின்றேன்.
அதுவும் வான்கோவர் போன்ற ஒரு அழகான நகரத்தில் விளையாடுவது மகிழ்ச்சியை தருகிறது. இந்த தொடர் கிரிக்கெட்டில் சிறிய நாடுகளை முன்னேற்ற உதவும். எங்களுடைய அனுபவத்தை அடுத்த தலைமுறை வீரர்களுக்கு நிச்சயம் நாங்கள் எடுத்துரைப்போம். இதன் மூலம் கனடாவில் உள்ள கிரிக்கெட் வீரர்கள் நல்ல பயன்பெற முடியும்.
ஒரு வரலாற்று சிறப்புமிக்க தருணத்தில் நானும் இடம் பெறுவது மகிழ்ச்சியை தருகிறது என்று சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார். இந்த போட்டிகள் அனைத்தும் Fancodeஆப்பில் மட்டும்தான் இந்தியாவில் பார்க்க முடியும். இந்திய நேரப்படி இந்த தொடர் அக்டோபர் ஒன்பதாம் தேதி அதிகாலை 5. 30 மணி, 8 மணி மற்றும் 11 மணிக்கு என ஒரு நாளைக்கு மூன்று போட்டிகள் நடைபெறுகிறது.