லாகூர்: சாம்பியன்ஸ் டிராபி தொடர் பிப்ரவரி 19ஆம் தேதி முதல் தொடங்கி மார்ச் 9ஆம் தேதி வரை நடைபெறுகிறது. பாகிஸ்தான் மற்றும் துபாயில் ஹைபிரிட் மாடல் முறைப்படி இந்த தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் இந்தியா விளையாடும் போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்படுகிறது.
இந்த சூழலில் ஐசிசி தொடர் நடைபெறுகிறது என்றால் அதில் பங்கு பெறும் அணிகளின் தேசியக்கொடிகள் மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும். ஆனால் தற்போது சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய தேசிய கொடியை தவிர மற்ற அனைத்து நாடுகளின் கொடியும் இருப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியானது.

இது இந்திய ரசிகர்களை கடும் அதிர்ச்சி அடைய வைத்திருக்கிறது. இந்த விவகாரம் குறித்து தற்போது முதல் முறையாக பிசிசிஐ துணைத் தலைவர் ராஜூ சுக்லா கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர், முதலில் சமூக வலைத்தளத்தில் தான் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
இதனால் இந்திய தேசியக்கொடி பாகிஸ்தான் மைதானங்களில் இருக்கிறதா? இல்லையா என்பது குறித்து நாம் உறுதியாக தெரிந்து கொள்ள வேண்டும். ஒருவேளை இந்தியாவின் தேசியக்கொடி இல்லை என்றால் அதனை கண்டிப்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வைக்க வேண்டும்.
தொடரில் பங்கேற்கும் அனைத்து நாடுகளின் கொடிகளும் மைதானத்தில் இருப்பதுதான் சரி என்று ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார். எனினும் இதற்கு விளக்கம் அளித்துள்ள பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், போட்டி நடைபெறும் நாளில் மைதானத்தில் நான்கு கொடிகள் மட்டும் தான் இருக்க வேண்டும் என ஐசிசி அறிவுறுத்தி இருப்பதாக தெரிவித்துள்ளது.
ஐசிசி யின் கொடி மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கொடி மற்றும் அன்றைய நாளில் எந்த இரண்டு அணிகள் மோதிகிறார்களோ அவர்களுடைய தேசியக்கொடி மட்டும் தான் மைதானத்தில் இருக்க வேண்டும் என ஐசிசி கூறி இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் பாகிஸ்தானின் கூற்றுப்படி இந்தியா, துபாயில் போட்டிகளில் விளையாடுவதால் இந்திய கொடி பாகிஸ்தானில் உள்ள மூன்று மைதானங்களிலும் பறக்க விடப்படாது என்பது குறிப்பிடத்தக்கது.