துபாய்: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் ஃபார்ம் மோசமாக இருக்கிறது. இதுவரை நடந்த நான்கு போட்டிகளில் அவரது ஸ்கோர் - 41, 20, 15 மற்றும் 28 ஆகும். இது
குறித்து ஊடகத்தினர் கேட்ட கேள்விக்கு, பயிற்சியாளர் கவுதம் கம்பீர் ரோஹித்துக்கு ஆதரவாகப் பேசி இருந்தார்.
ரோஹித் சர்மா மற்ற வீரர்களிடையே ஒரு கேப்டனாக என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறார் என்பதுதான் முக்கியம், எவ்வளவு ரன்கள் எடுக்கிறார் என்பது முக்கியமில்லை எனக் கூறியிருந்தார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ள மறுத்திருக்கும் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

ரோஹித் சர்மா ஒரு வீரராக 25-30 ரன்களை மட்டும் எடுத்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறாரா? எனக் கேட்டிருக்கிறார். ரோஹித் 25 ஓவர்கள் வரை நின்றால் இப்போது ஏற்படுத்தும் தாக்கத்தை விடப் பெரிய தாக்கத்தை சக வீரர்கள் மத்தியில் ஏற்படுத்த முடியும் எனவும் சுட்டிக்காட்டியிருக்கிறார்.
இது பற்றி சுனில் கவாஸ்கர் பேசுகையில்: "ரோஹித் சர்மா 25 ஓவர்கள் வரை பேட்டிங் செய்தால் கூட இந்திய அணியின் ஸ்கோர் 180 முதல் 200 வரை இருக்கும். யோசித்துப் பாருங்கள், அதன் பின் சில விக்கெட்டுகள் மட்டும் விழுந்தால் கூட இந்திய அணியால் என்ன செய்ய முடியும்? நிச்சயமாக 350 அல்லது அதற்கு மேல் ரன்களை குவிக்க முடியும். இது பற்றி ரோஹித் சர்மா சிந்திக்க வேண்டும்.
ஆடுகளத்துக்குச் சென்று அதிரடியாக விளையாடுவது ஒரு விஷயம். ஆனால், 25 முதல் 30 ஓவர்கள் வரை அவர் நின்று ஆடுவதற்குத் தனக்குத்தானே வாய்ப்பு அளிக்க வேண்டும். அதை அவர் செய்தால், அந்த ஆட்டம் எதிரணியின் கைகளில் இருந்து சென்றுவிடும். அதுதான் போட்டியில் வெற்றி பெறுவதற்கான தாக்கத்தை ஏற்படுத்தும்.
நீங்கள் ஒரு பேட்ஸ்மேனாக 25 முதல் 30 ரன்கள் எடுத்துவிட்டு மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? நிச்சயமாக இருக்க மாட்டீர்கள். அதைத்தான் நான் அவரிடம் சொல்ல விரும்புகிறேன். நீங்கள் ஏழு, எட்டு அல்லது ஒன்பது ஓவர்கள் வரை நின்று ஆடுவதை விட, 25 ஓவர்கள் வரை நின்று ஆடினால், அதனால் அணியில் அதன் தாக்கம் இன்னும் அதிகமாகவே இருக்கும்," என்றார்.
இதன் மூலம் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், ரோஹித் சர்மாவின் தாக்கம் பற்றி பேசிய பேச்சுக்கு நேரடியாக பதிலடி கொடுத்து இருக்கிறார் சுனில் கவாஸ்கர். கவுதம் கம்பீர், 'தாங்கள் ஒரு வீரரின் ரன்களையோ, பேட்டிங் சராசரியையோ பார்க்க மாட்டோம். என்ன தாக்கம் ஏற்படுத்துகிறார் என்றுதான் பார்ப்போம்' என சொன்னதற்கு நேரடியாக ரன்கள் தான் முக்கியம் என சுனில் கவாஸ்கர் நெத்தியடியாக பதில் அளித்துள்ளார்.