துபாய்: சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தங்களுடைய முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை பிப்ரவரி 20ஆம் தேதி வியாழக்கிழமை எதிர்கொள்கிறது. துபாயில் நடைபெறும் இந்த போட்டிக்காக இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. பார்டர் கவாஸ்கர் தொடர் மற்றும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறாததால் கேப்டன் ரோகித் சர்மா மீது கடும் அதிருப்தி நிலவுகிறது.
இதனால் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை வென்று அதற்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயத்தில் ரோகித் சர்மா இருக்கின்றார். இந்த நிலையில் துபாயில் செய்தியாளரிடம் பேசிய கேப்டன் ரோகித் சர்மா சாம்பியன்ஸ் கோப்பை தொடர் எங்களுக்கு மிகவும் முக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக பேசிய அவர், "சாம்பியன்ஸ் கோப்பை தொடர் எங்களுக்கு முக்கியமானது. இருப்பினும் மற்ற தொடர்களில் எப்படி விளையாடுவோமோ அதே போல் தான் இந்தத் தொடரிலும் நாங்கள் விளையாடுவோம். இந்தியாவுக்காக விளையாடுவது என்பது ஒவ்வொரு வீரருக்கும் மிகப்பெரிய விஷயமாகும்.
சில நேரத்தில் நாம் சிலர் வீரர்களை நிச்சயமாக மிஸ் செய்வோம்".
"ஆனால் எங்கள் அணியில் பல திறமை வாய்ந்த வீரர்கள் இருக்கிறார்கள். ஐந்து சுழற் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக பலரும் கேட்கிறார்கள். ஆனால் நான் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் என்று பார்க்க மாட்டேன். இரண்டு சுழற் பந்துவீச்சாளர்கள் மூன்று, ஆல் ரவுண்டர்கள் இருக்கிறார்கள் என்று தான் நான் பார்க்கின்றேன்".
"ஜடேஜா, அச்சர் பட்டேல், வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேட்டிங்கில் நன்றாக விளையாடக் கூடியவர்கள். இவர்கள் அணியில் இருந்தால் பேட்டிங் வரிசை நீளமாக இருக்கும். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வெற்றி பெற வேண்டும் என்றால் அணியில் இருக்கும் டாப் 4 வீரர்கள் பெரிய ஸ்கோர் அடிக்க வேண்டும்".
"சுப்மன் கில் ஒரு கிளாஸ் ஆன வீரர். அவருடைய புள்ளி விவரங்கள் எல்லாம் சிறப்பானதாக இருக்கின்றது. இந்திய அணியின் துணை கேப்டனாக அவரை உயர்த்தி இருக்கிறோம் என்றால் அதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கின்றது. இங்கிலாந்துக்கு எதிரான தொடர் எங்களுக்கு நல்ல பயிற்சியாக அமைந்தது. எங்கள் அணியில் இருந்த குறைகளை நிவர்த்தி செய்ய அது ஒரு வாய்ப்பாக அமைந்தது".
"பனிப்பொழிவு நாளை இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் அதைப்பற்றி எல்லாம் கவலை கொள்ளவில்லை. இதை எல்லாம் சமாளிக்கும் விதமான வீரர்கள் எங்களிடம் இருக்கிறார்கள். ஒரு கிரிக்கெட் ஃபார்மட்டில் நாங்கள் சரியாக செயல்படவில்லை என்பதால் அதை போல் தான் மற்ற கிரிக்கெட் வடிவத்திலும் நாங்கள் இருப்போம் என்பதெல்லாம் கிடையாது. நாங்கள் இன்னும் ஆடுகளத்தை பார்க்கவில்லை. பார்த்த பின்பு தான் பிளேயிங் லெவன் குறித்து முடிவு செய்வோம். வலை பயிற்சிகள் இரண்டு சிறந்த பாகிஸ்தான் பவுலர்கள் எங்களுக்கு பந்து வீசினார்கள். அவர்கள் பந்தை எதிர்கொண்டது நல்ல பயிற்சியாக இருந்தது என்று கேப்டன் ரோகித் சர்மா கூறியுள்ளார்.