துபாய்: ஐசிசி விதித்துள்ள மோசமான விதிகளால் ஒருநாள் கிரிக்கெட் அழிந்து வருவதாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் மோயின் அலி தெரிவித்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக 138 ஒரு நாள் போட்டிகளில் விளையாடிய மோயின் அலி 2355 ரன்களும் பந்துவீச்சில் 111 விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கிறார்.
அதேபோன்று 68 சர்வதேச டெஸ்ட் போட்டியில் விளையாடி 3000 ரன்களுக்கு மேலாகவும் 200 விக்கெட்டுகளுக்கு மேலாகவும் எடுத்திருக்கிறார். இந்த சூழலில் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் ஓய்வு பெற்ற சிஎஸ்கே அணியின் முக்கிய வீரராக இருந்த மோயின் அலி, தற்போது கே கே ஆர் அணிக்காக விளையாடப் போகிறார்.

இந்த நிலையில் பேட்டி ஒன்றில் பேசிய மோயின் அலி, "50 ஓவர் கிரிக்கெட் முற்றிலும் அழிந்து வருகிறது. உலகக்கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை தவிர ஒரு நாள் கிரிக்கெட் பார்க்க யாருமே விரும்ப மாட்டார்கள். ஏனென்றால் இது விளையாடுவதற்கு ஒரு மோசமான ஒரு போட்டியாக மாறிவிட்டது."
"அதற்குக் காரணம் ஐசிசி விதித்துள்ள முட்டாள்தனமான விதிகள் தான். முன்பெல்லாம் பவர் பிளே முதல் 10 ஓவரில் முடிந்து விடும். அதன் பிறகு 11வது ஓவரிலிருந்து 40 வது ஓவர் வரை பவுண்டரி லைனில் ஐந்து வீரர்கள் நிற்பார்கள். தற்போது இதனை மாற்றி வெறும் நான்கு வீரர்கள் மட்டும்தான் இருக்கும் வகையில் ஐசிசி விதிகளை விதித்து இருக்கிறது."
"இதனால் தற்போது இருக்கும் கிரிக்கெட் வீரர்கள் ஒருநாள் கிரிக்கெட்டில் 60, 70 என சராசரியை வைத்திருக்கிறார்கள். இதன் காரணமாக பவுலர்கள் அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். பேட்ஸ்மேனுக்கு கொஞ்சம் நெருக்கடியை ஏற்படுத்தினால் அவர் ரிவர்ஸ் ஸ்வீப் ஆடி பவுண்டரி அடித்து விடுகிறார். பேட்டர்ஸ் ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதற்காகவே போட்டி மாற்றப்பட்டுவிட்டது."
"மேலும் இரண்டு புது பந்துகள் பயன்படுத்தப்படுவதால் ரிவர்ஸ் ஸ்விங் என்ற ஒன்று இல்லாமல் போய்விட்டது. இதனால் வீரர்கள் அடிக்கும் பந்தெல்லாம் பௌண்டரி, சிக்சர் என செல்கின்றது. இதன் காரணமாக தான் ஒரு நாள் கிரிக்கெட் தற்போது அழிந்து வருகிறது என நான் சொல்கின்றேன். மேலும் டி20 கிரிக்கெட்டில் பணம் கிடைக்கிறது. இதன் காரணமாக பல சர்வதேச வீரர்கள் இனி தொடர்ந்து தங்களது நாட்டுக்காக விளையாட மாட்டார்கள். இதன் காரணமாக பல வீரர்கள் முன்கூட்டியே ஓய்வு பெறுவதை நீங்கள் பார்க்கலாம்" என்று மோயின் அலி தெரிவித்துள்ளார்.