மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் டாப் எட்டு அணிகள் மோதினாலும் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் போட்டி என்றால் அது இந்தியா, பாகிஸ்தான் மோதும் ஆட்டம் தான். பிப்ரவரி 23ஆம் தேதி துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் யார் வெல்வார்கள் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்தப் போட்டி குறித்து ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், பாகிஸ்தான் அணி பலவீனமாக இருப்பதாகவும் இந்தியாவுக்கு எதிரான போட்டி ஒருதலைப்பட்சமாக முடிவடையும் என்று கூறியிருந்தார்.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள பாகிஸ்தான் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முகமது யூசுப், சாம்பியன்ஸ் கோப்பை பட்டத்தை பாகிஸ்தான் அணி கைப்பற்றும் என நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்திய அணியின் பேலன்ஸ் நன்றாக இருக்கிறது. ஆனால் பாகிஸ்தான் அணிக்கு தான் சாம்பியன் கோப்பையை வெல்ல அதிக வாய்ப்பு இருப்பதாக நினைக்கின்றேன்.
ஏனென்றால் பெரும்பான்மையான போட்டிகளை அவர்கள் சொந்த மண்ணில் விளையாடுகிறார்கள். எனினும் சரியான முறையில் கிரிக்கெட்டை கணக்கிட்டு விளையாடினால், மட்டுமே பாகிஸ்தான் அணிகள் வெற்றி பெற முடியும். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் எப்படி விளையாட வேண்டும் என்று நமக்கு தெரியும்.
சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது இரண்டு வீரர்களுக்கு நடுவே இருக்கும் இடத்தை பார்த்து ரன்கள் சேர்க்க வேண்டும். அதிக சிங்கிள்ஸ் எடுக்க வேண்டும். ஆனால் நியூசிலாந்துக்கு எதிரான முத்தரப்பு ஒரு நாள் தொடரில் நாம் மோசமாக விளையாடினோம். சுழற் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்த நாம் தவறவிட்டோம்.
இதேபோன்று நாம் பீல்டிங் செய்யும் போதும் நமது பீல்டிங் செட்டப் சரி இல்லை. இந்த தொடரிலேயே நியூசிலாந்து அணி தான் பலமான அணியாக விளங்குகிறது. ஆசிய ஆடுகளத்திற்கு ஏற்ற வகையில் தங்களது அணியை தேர்வு செய்திருக்கிறார்கள். நியூசிலாந்து அணியில் சிறந்த வேக பந்துவீச்சாளர்களும் சுழற் பங்குச்சாளர்களும் இருக்கிறார்கள். அந்த அணியின் பேட்டிங் வரிசையில் பலமாக இருக்கிறது. விக்கெட் கீப்பரும் நன்றாக பேட்டிங் செய்கிறார். இரண்டு சுழற் பந்து வீச்சாளர்களும் ஆல்ரவுண்டர்களாக இருக்கிறார்கள் என்று முஹம்மது யூசுப் பாராட்டியுள்ளார்.