மும்பை: சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி 3 சாதனை படைக்க வாய்ப்பு இருக்கின்றது. இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் ஹைப்ரிட் மாடல் முறைப்படி துபாயில் நடைபெறுகிறது. இந்திய அணி, தங்களது முதல் லீக் ஆட்டத்தில் வங்கதேசத்தை பிப்ரவரி 20ஆம் தேதியும், பாகிஸ்தானை பிப்ரவரி 23ஆம் தேதியும், நியூசிலாந்தை மார்ச் இரண்டாம் தேதியும் எதிர்கொள்கிறது.
இந்த போட்டிகள் அனைத்திலும் இந்திய அணி வெற்றி பெற்றால் அரையிறுதி சுற்றுக்கு செல்ல முடியும். இந்த நிலையில் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் விராட் கோலி 2009, 2013 மற்றும் 2017 என மூன்று தொடர்களில் விளையாடி இருக்கிறார். இது விராட் கோலி விளையாடும் நான்காவது தொடராகும்.

இதுவரை சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி மொத்தமாக 529 ரன்களை அடித்திருக்கிறார். இதில் ஐந்து அரை சதம் அடங்கும். விராட் கோலியின் சராசரி 88 என்ற அளவில் இருக்கிறது. இந்த தொடரில் 300 ரன்களுக்கு மேல் குவித்த வீரர்கள் பட்டியலில் அதிக சராசரி வைத்திருக்கும் வீரர் என்றால் அது விராட் கோலி மட்டும் தான்.
எனினும் இந்த தொடரில் விராட் கோலி இதுவரை ஒரு சதம் கூட அடிக்கவில்லை. சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்திருக்கும் வீரர் என்றால் அது கெயில் தான். 17 போட்டியில் விளையாடி 791 ரன்கள் அடித்திருக்கிறார். இதனால் விராட் கோலி இந்த தொடரில் 263 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் அடித்த கெயிலின் சாதனையை முறியடித்து விடுவார்.
விராட் கோலி 25 ரன்கள் அடித்தால் சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் 800 ரன்கள் குவித்த முதல் இந்தி வீரர் என்ற பெருமை அவருக்கு கிடைக்கும். ஒருவேளை 173 ரன்கள் இந்த தொடரில் விராட் கோலி அடித்தால் சாம்பியன்ஸ் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர் ஷிகர் தவானின் சாதனையை விராட் கோலி முறியடிப்பார்.
இதேபோன்று விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் 3 ஐசிசி கோப்பைகளை வென்றிருக்கிறார்கள். இதில் விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் சாம்பியன்ஸ் கோப்பையை வென்றால் ரிக்கி பாண்டிங் பிறகு நான்கு ஐசிசி கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் என்ற சாதனையை படைப்பார்கள். இதேபோன்று விராட் கோலி இன்னும் 37 ரன்கள் அடித்தால் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 14 ஆயிரம் ரன்களைத் தொட்ட மூன்றாவது வீரர் மற்றும் 14 ஆயிரம் ரன்களை அதிவேகமாக எட்டிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி பெறுவார்.