துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவிடம், எதிர்கால திட்டம் என்ன? என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ரோஹித் சர்மா, இப்போது என்ன நடக்கிறதோ.. அது அப்படியே தொடரும்.. எதிர்கால திட்டம் என்ன என்பது எதிர்காலத்தில் தெரியும் என்று பதில் அளித்துள்ளார்.
ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை வென்று இந்திய அணி புதிய வரலாறு படைத்துள்ளது. நியூசிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியதன் மூலமாக இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக 2002, 2013 ஆகிய ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி மீண்டும் சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ளது. இந்திய அணியின் 7வது ஐசிசி கோப்பை இதுவாகும்.

இந்திய அணியின் இந்த வெற்றிக்கு கேப்டன் ரோஹித் சர்மாவின் பங்களிப்பு முக்கியமான ஒன்றாகும். சிறப்பாக ஆடி 76 ரன்களை விளாசி ஆட்டநாயகன் விருதை ரோஹித் சர்மா கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் சர்மாவிடம், ஓய்வு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டது.
அதற்கு ரோஹித் சர்மா, இப்போது என்ன நடக்கிறதோ.. அது அப்படியே தொடரும்.. எதிர்கால திட்டம் என்ன என்பது எதிர்காலத்தில் தெரியும். ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெறும் எண்ணம் கிடையாது. வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன் என்று நேரடியாகவே பதில் அளித்துள்ளார். இதன்பின் தொடர்ந்து பேசுகையில், 2019 உலகக்கோப்பை தொடரில் அதிக ரன்களை விளாசினேன். ஆனால் இந்திய அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஆனால் இந்திய அணி வெற்றி பெறும் போது, நமது பங்களிப்பும் இருப்பது மன நிறைவை அளிக்கிறது. நான் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தேன். அதனை செய்வதற்கு ஒவ்வொரு ஆட்டத்திலும் விளையாடினேன். இந்த கோப்பையை இந்திய நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் அர்ப்பணிக்கிறேன். ஏனென்றால் அவர்கள் அனைவரும் நாங்கள் வெல்ல வேண்டும் என்று விரும்பினார்கள்.
அதேபோல் ஸ்ரேயாஸ் ஐயர் ஒரு சைலண்ட் ஹீரோ. மிடில் ஆர்டரில் அவரின் பங்களிப்பு அளப்பறியது. இன்றைய ஆட்டத்தில் கூட என் விக்கெட் வீழ்ந்த பின், அவரும் அக்சர் படேலும் இணைந்து சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப்பை உருவாக்கினார்கள் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலமாக ரோஹித் சர்மா 2027 உலகக்கோப்பையை மனதில் வைத்துள்ளாரா என்ற கேள்வியும் ரசிகர்கள் இடையே எழுந்துள்ளது.