அகமதாபாத்: குஜராத் அணி வெற்றிபெறுவதற்கு 179 ரன்களை இலக்காக சென்னை அணி நிர்ணயித்துள்ளது. சென்னை அணி சார்பாக அதிகபட்சமாக ருதுராஜ் கெய்க்வாட் 92 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் தொடரில் 2023ஆம் ஆண்டில் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே, குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதனையடுத்து சிஎஸ்கே அணியின் தொடக்க வீரராக ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே களமிறங்கினர். தொடர்ந்து குஜராத் அணியின் நட்சத்திர வீரர் முகமது ஷமி வீசிய பந்தில் டெவன் கான்வே 1 ரன்னில் போல்டாகி வெளியேறினார்.

இதனையடுத்து களம் புகுந்த மொயின் அலி ருதுராஜிற்கு கம்பெனி கொடுக்க, சிக்சரும் பவுண்டரியுமாய் வெளுத்து வாங்கினார். குறிப்பாக ஹர்திக் பாண்டியா மற்றும் ஜோஷ் லிட்டில் ஆகியோரது பந்தில் அடுத்தடுத்து பவுண்டரி மற்றும் சிக்சர்களை விளாசினார். இதன் காரணமாக லிட்டிலை பந்துவீசுவதில் இருந்து சிறிது நேரம் குஜராத் அணி விலக்கி வைக்க நேர்ந்தது.
அதேபோல் தேவைக்கு முன்னதாகவே ரஷீத் கானை குஜராத் அணி அட்டாக்கில் கொண்டு வந்தது. அதற்கு பலனாக மொயின் அலி 23 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் ரூ.16 கோடிக்கும் அதிகமாக ஏலத்தில் கொடுத்து வாங்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ் 7 ரன்களில் நடையை கட்டினார். இரு முக்கிய வீரர்களையும் ரஷீத் கான் வீழ்த்தினார். இதனால் சென்னை அணி 7 ஓவர்களில் 70 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.
ஆனால் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஆடிய ருதுராஜ் கெய்க்வாட் குஜராத் அணியின் பந்துவீச்சாளர்களை மைதானத்தின் நாலா பக்கமும் வெளுத்து வாங்கினார். இதன் காரணமாக 23 பந்துகளிலேயே அரைசதம் விளாசினார். இந்த அரைசதத்திற்கு பின் ருதுராஜின் அதிரடி இன்னும் உக்கிரமாக மாறியது. இதனால் சென்னை அணி 200 ரன்களை எட்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
எப்போதும் எம்ஜிஆர் போல் முதல் மூன்று போட்டிகளில் நிதானம் காட்டும் ருதுராஜ், இம்முறை முதல் போட்டியிலேயே ஃபார்மிற்கு வந்துள்ளார். ஆனால் மிடில் ஆர்டரில் வந்த முக்கிய வீரரான ராயுடு 12 பந்துகளில் 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, சிவம் தூபேவின் நிதான ஆட்டம் சென்னை அணியின் ரன் சேர்ப்பின் வேகத்திற்கு தடையாக மாறியது. இன்னும் சொல்லப் போனால், சிவம் தூபேவின் பேட்டில் பந்து தொட்டு செல்வதே பெரிய விஷயமாக மாறியது.
இதனால் 20 பந்துகளாக ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை. இதனால் சென்னை அணி 16 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்திருந்தது. இதன் பின்னர் 17வது ஓவரின் முதல் பந்திலேயே சிக்சரை விளாசினார் ருதுராஜ் கெய்க்வாட். இதனைத் தொடர்ந்து சதம் விளாசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் 92 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் ஜடேஜாவும் 1 ரன்னில் ஆட்டமிழக்க, சென்னை அணியின் நிலை மோசமானது.
அதன் பின்னர் துபேவும் 19 ரன்களில் ஆட்டமிழக்க, சரியாக ஃபினிஷிங் செய்ய வேண்டிய பொறுப்பு தோனியிடம் கொடுக்கப்பட்டது. இறுதி ஓவரை குஜராத் அணி சார்பாக ஜோஷ் லிட்டில் வீசினார். அந்த ஓவரின் 3வது பந்தில் தோனி ஒரு சிக்சர் அடிக்க, அடுத்த பந்தில் பவுண்டரி விளாசினார். இறுதியாக 20 ஓவரில் 178 ரன்களை சென்னை அணி எடுத்தது.