உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்.. இந்திய அணியில் புஜாரா தான் டாப்.. கண்டிப்பா இன்னொரு சம்பவம் இருக்கு!
லண்டன்: 2021 ஜூலை முதல் 2023 ஜூன் வரையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி சார்பாக புஜாரா அதிகபட்சமாக 883 ரன்களை விளாசியுள்ளார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணியை எதிர்த்து ஆஸ்திரேலியா அணி விளையாட உள்ளது. இந்தப் போட்டிக்காக ஆஸ்திரேலியா வீரர்கள் நீண்ட நாட்களாக இங்கிலாந்தில் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். எந்த அணிக்கும் சாதகம் இருக்கக் கூடாது என்பதற்காக பொதுவான மைதானமான இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் ஆட்டம் நடக்கவுள்ளது.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக அனைவரும் ஐபிஎல் தொடரின் முடிவடைந்த பின் இங்கிலாந்து வந்து சேர்ந்தனர். ஆனால் இந்திய வீரர் புஜாரா மட்டும் 2 மாதங்களுக்கு முன்பாகவே இங்கிலாந்து வந்துள்ளார். சசக்ஸ் அணிக்காக கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் கேப்டனாக விளையாடிய அவர், ஒரு கட்டத்தில் சதங்களாக விளாசி தள்ளினார். இதனால் இந்திய ரசிகர்களும் புஜாராவை பாராட்டி வந்தனர்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் நிச்சயம் புஜாரா அசத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்ப புஜாராவின் அனுபவம் மற்ற வீரர்களுக்கும் பயன்பட்டு வருகிறது. தனது அனுபவத்தை சக வீரர்களுடன் புஜாரா பகிர்ந்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்களையும் புஜாராவே விளாசியுள்ளார்.
2021ஆம் ஆண்டு ஜூலையில் தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷ்இப் தொடங்கி, 2023ஆம் ஆண்டு ஜூன் வரை மொத்தமாக 30 இன்னிங்ஸ்களில் களமிறங்கிய புஜாரா 883 ரன்களை விளாசியுள்ளார். இவருக்கு பின், விராட் கோலி 28 இன்னிங்ஸ்களில் விளையாடி 869 ரன்களும், கேப்டன் ரோகித் சர்மா 17 இன்னிங்ஸ்களில் விளையாடி 700 ரன்களையும் விளாசியுள்ளனர். இதனால் புஜாரா மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications