16.25 கோடி.. ஐபிஎல் வரலாற்றில் புதிய ரெக்கார்டு.. எதிர்பார்க்காத க்றிஸ் மோரிஸ்
சென்னை: ஐபிஎல் ஏலத்தில் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் க்றிஸ் மோரிஸை 16.25 கோடி ரூபாய் கொடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் ஏலத்தில் எடுத்துள்ளது.
ஐபிஎல் ஏலம் சென்னையில் இன்று தொடங்கியுள்ளது. அணிகளுக்கு இடையேயான மோதல் தகதக மோடில் உள்ளது. மேக்ஸ்வெல்லை எடுப்பதில் சென்னை - பெங்களூரு இடையே பெரும் போராட்டமே நிகழ்ந்தது, இறுதியில், 14.25 கோடி தொகைக்கு பெங்களூரு அணி அவரை ஏலத்தில் எடுத்தது.
இந்த சீசனில் அதிக தொகைக்கு விலை போன வீரராக மேக்ஸ்வெல் ப்ரோ தான் இருப்பார் என்று அனைவரும் ட்வீட் செய்து கொண்டிருக்க, சைடு கேப்பில் தட்டித் தூக்கியுள்ளார் க்றிஸ் மோரிஸ்.

கோதாவில் மும்பை
க்றிஸ் மோரிஸ் பெயர் ஏலத்திற்கு வந்த பிறகு, மும்பையும், பெங்களூருவுக்கு அவரை எடுக்க மல்லுக்கட்டின. மோரிஸின் அடிப்படை விலை ரூ.75 லட்சம் தான். ஆனால், ஏலத்தில் மும்பை அவரை ஐந்து கோடி வரை இழுத்துச் செல்ல, பெங்களூருவும் விடாப்பிடியாய் நின்றது. மீண்டும் 8 கோடி, 10 கோடி என்று செல்ல, பெங்களூரு ரேஸில் இருந்து பின்வாங்கியது

எகிறிய விலை
10 கோடி தாண்டிய பிறகு, ராஜஸ்தானை மும்பையுடன் மோதியது. 13 கோடி வரை மோதிப் பார்த்த ராஜஸ்தான் அதன் பிறகு பின்வாங்க, பஞ்சாப் என்ட்ரி கொடுத்தது. அப்போதும் மும்பை விட்டுக் கொடுக்காமல் நிற்க, மீண்டும் ராஜஸ்தான் கோதாவில் இறங்கியது. இறுதியில், 16.25 கோடி கொட்டிக் கொடுத்து மோரிஸை இறுதி செய்தது ராஜஸ்தான்.

ஐபிஎல் வரலாற்றில்
16.25 கோடிக்கு வாங்கப்பட்டதன் மூலம், ஐபிஎல் ஏலத்தில் அதிக தொகைக்கு எடுக்கப்பட்ட வீரர் எனும் சாதனையை க்றிஸ் மோரிஸ் படைத்துள்ளார். இதற்கு முன் 16 கோடிக்கு யுவராஜ் சிங் எடுக்கப்பட்டதே பெரிய தொகையாக இருந்தது. தற்போது மோரிஸ் அதனை முறியடித்துள்ளார். எனினும், ஐபிஎல்-ல் அதிகம் ஊதிய வாங்கும் வீரர் விராட் கோலி தான். அவரது சம்பளம் 17 கோடி.

புரியாத புதிர்
ஐபிஎல்-ல் காயம் காரணமாக அடிக்கடி விலகும் வீரர் என்றால் கண்ணை மூடிக் கொண்டு மோரிஸை சொல்லலாம். போன 2020 சீசனில், பெங்களூரு அணிக்காக இவர் பல போட்டிகளில் காயத்தால் களமிறங்கவே இல்லை. காயம் காரணமாக கிட்டத்தட்ட ஒரு வருடம் அவர் கிரிக்கெட்டே விளையாடாமல் இருந்தார். ஆனால், இவரை எதற்கு இவ்வளவு போட்டிப் போட்டு 16.25 கோடிக்கு ராஜஸ்தான் எடுத்தது என்பது ராஜஸ்தான் நிர்வாகத்துக்கே வெளிச்சம்.


Click it and Unblock the Notifications