12 ஆண்டுகள் காத்திருப்பு.. இந்திய அணிக்கு தேர்வான ரஞ்சி கிரிக்கெட் ஜாம்பவான்.. சாதித்த உனாத்கட்!
மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் 12 ஆண்டுகளுக்கு பின் இடம்பிடித்து உனாத்கட் சாதனை படைத்துள்ளார்.
வங்கதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த டெஸ்ட் தொடர் டிச.14ம் தேதி தொடங்க உள்ளது.
இதனிடையே வங்கதேச அணியுடனான 2வது ஒருநாள் போட்டியின் போது இந்திய கேப்டன் ரோகித் சர்மா காயம் காரணமாக வெளியேறினார். அதேபோல் முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி ஆகியோர் காயமடைந்தனர். அதுமட்டுமல்லாமல் ஜடேஜாவும் முழுமையாக காயத்தில் இருந்து குணமடையவில்லை.

உனாத்கட் தேர்வு
இதனால் ரோகித் சர்மா மற்றும் ஷமி ஆகியோருக்கான மாற்று வீரர்கள் யார் என்று தேர்வு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்கான மாற்று வீரராக இந்திய ஏ அணியின் கேப்டன் அபிமன்யூ ஈஸ்வரனும், முகமது ஷமிக்கான மாற்று வீரராக அனுபவ வீரர் ஜெய்தேவ் உனாத்கட்-ம் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

உள்ளூர் கிரிக்கெட் நாயகன்
கடந்த சில ஆண்டுகளாக அனுபவ வீரரான உனாத்கட் உள்ளூர் கிரிக்கெட் தொடர்களில் அசத்தி வருகிறார். இவர் தலைமையில் செளராஷ்டிரா அணி ரஞ்சி டிராவி தொடரை கைப்பற்றியது. தொடர்ந்து விஜய் ஹசாரே தொடரையும் 14 ஆண்டுகளுக்கு பின் செளராஷ்டிரா அணி வென்று சாதனை படைத்தது. இந்த இரு கோப்பைகளையும் வெல்வதற்கு உனாத்கட் முக்கிய காரணமாக இருந்தார்.

19 விக்கெட்டுகள்
குறிப்பாக விஜய் ஹசாரே தொடரில் 10 போட்டிகளில் விளையாடி உனாத்கட் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாகவே செயல்பட்டார். 31 வயதாகும் இடதுகை வேகப்பந்துவீச்சாளரான உனாத்கட், இதுவரை இந்திய அணிக்காக ஒரு டெஸ்ட், 7 ஒருநாள் மற்றும் 10 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.

12 ஆண்டுகள்
அதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் 2010ம் ஆண்டு தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார். அதற்கு பின் இந்திய அணிக்காக டெஸ்ட் போட்டியில் களமிறங்கும் வாய்ப்பு உனாத்கட்டிற்கு கிடைக்கவில்லை. இருப்பினும் விடாபிடியாக முயற்சித்த உனாத்கட், 12 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் டெஸ்ட் அணியில் இடம்பிடித்து சாதித்துள்ளார்.


Click it and Unblock the Notifications