ஐயோ அவரா.. பயங்கரமான ஆளாச்சே.. நல்லவேளை செமி பைனல்ல நடுவரா வரலை.. இந்தியாவுக்கு அடித்த அதிர்ஷ்டம்!
அடிலெய்ட்: இங்கிலாந்து அணியுடனான அரையிறுதிப்போட்டியில் இந்திய அணி ரசிகர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் அளவிற்கான ஒரு அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி சுற்று நாளை முதல் தொடங்கவுள்ளது. நாளை நடைபெறும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி சிட்னியில் நடைபெறுகிறது.
நாளை மறுநாள் ( நவம்பர் 10 ) நடைபெறும் 2வது போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி அடிலெய்டில் உள்ள ஓவல் மைதானத்தில் நடக்கவுள்ளது.

ஐசிசி-ன் அறிவிப்பு
அனைத்து அணிகளும் தீவிரமாக தயாராகி வரும் சூழலில் இந்த போட்டிகளுக்கான நடுவர்களை ஐசிசி அறிவித்துள்ளது. அதன்படி இந்தியா - இங்கிலாந்து போட்டிக்கு குமார் தர்மசேனா மற்றும் பால் ரெய்ஃபெல் ஆகியோர் கள நடுவர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதே போல கிறிஸ் கஃப்பானே மற்றும் ராட் டக்கர் ஆகியோர் 3வது மற்றும் 4வது நடுவர்கள் ஆகும்.

உற்சாகத்தில் ரசிகர்கள்
இந்நிலையில் இதனை கேட்ட ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்து வருகின்றனர். இதற்கு காரணம் இப்போட்டியில் அம்பயராக ரிச்சர்ட் கெட்டில்போரோ நியமிக்கப்படாதது தான். ஏனென்றால் அவருக்கும் - இந்திய அணிக்கும் ஆகவே ஆகாத ஒன்றாக ரசிகர்கள் நினைத்து வருகின்றனர். இன்னும் சொல்லப்போனால் அவர் வந்தால் இந்தியா நிச்சயம் தோற்றுவிடும், போட்டியை பார்க்கவே வேண்டாம் என்ற அளவிற்கு உள்ளது.

யார் அந்த அம்பயர்
தோனியின் மூலம் ரிச்சர்ட் யார் என்பதை ரசிகர்கள் நன்கு தெரிந்துக்கொள்ளலாம். 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்துக்கு எதிராக தோனி நூலிழையில் ரன் அவுட்டாகி அழுதுக்கொண்டே சென்றார். அந்த வீடியோவில் நடுவர் ரிச்சர்ட் சோகமாக 3வது நடுவருக்கு சிக்னல் செய்ததை வீடியோவில் பார்க்காத ரசிகர்களே இருக்க முடியாது. அப்படி இந்திய அணி மீது பிரியம் வைத்துள்ளவரை புறகணிப்பதற்கும் காரணம் உள்ளது.

காரணம் என்ன
கடந்த 2014ம் ஆண்டில் இருந்து ஐசிசி தொடர்களில் இந்திய அணி நாக் அவுட்டான அனைத்துப் போட்டிகளிலும் கள அம்பயராக செயல்பட்டவர் ரிச்சர்ட் தான். 2014 டி20 உலகக்கோப்பை, 2016 டி20 உலகக்கோப்பை, 2015ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை, 2017 சாம்பியன்ஸ் டிராஃபி, 2019ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை என அனைத்து தொடர்களிலும் இந்திய அணி நாக் அவுட் சுற்றில் வெளியேறியது இவர் அம்பயரிங் செய்த போது தான். எனினும் அம்பயர் நியமனத்தால் இந்தியா வெல்லாது, அன்றைய தினம் எப்படி செயல்படுகிறார்களோ அது தான் முக்கியம் என்பதே வல்லுநர்களின் கருத்து.


Click it and Unblock the Notifications