சென்னை: இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்துவது சாதாரணம் என்பது போல் பேசியதாக வெளியான சர்ச்சைகளுக்கு, சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டே முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை - மும்பை அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் லீக் போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி, பந்துவீச்சைத் தேர்வு செய்தார். கடந்த இரு போட்டிகளாக சிஎஸ்கே அணிக்கு இம்பேக்ட் பிளேயராக வந்த துஷார் தேஷ்பாண்டே, இந்தப் போட்டியில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டிருந்தார். மும்பை அணி சார்பாக ரோகித் சர்மா - இஷான் கிஷான் இணை தொடக்க வீரர்களாக களமிறங்கியது.

தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய ரோகித் சர்மா ஒரு சிக்சர் உட்பட 3 பவுண்டரிகளை விளாசி சிறப்பாக ஆடி வந்தார். ஆனால் இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டே வீசிய இன்ஸ்விங்கரால் ரோகித் சர்மா 21 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். துஷார் தேஷ்பாண்டே வீசிய பந்து, ரோகித் சர்மாவின் மிடில் ஸ்டம்ப்பை பதம் பார்த்தது. ரோகித் சர்மாவின் விக்கெட்டை வீழ்த்திய துஷார் தேஷ்பாண்டே ஆரவாரமாக மகிழ்ச்சியை கொண்டாடினார்.
இதனைத் தொடர்ந்து மும்பை அணியின் மற்றொரு முக்கிய வீரரான டிம் டேவிட் விக்கெட்டையும் அவர் வீழ்த்தி அசத்தினார். இதனைத் தொடர்ந்து துஷார் தேஷ்பாண்டேவுக்கு தோனி பாராட்டு தெரிவித்திருந்தார். இதனிடையே ரோகித் சர்மா விக்கெட்டை வீழ்த்துவது எல்லாம் மிகவும் சாதாரணம். அவர் ஒன்றும் விராட் கோலியோ அல்லது டி வில்லியர்ஸோ அல்ல என்று துஷார் தேஷ்பாண்டே பேசியது போல் சமூக வலைதளங்களில் வதந்திகள் வெளியாகின.

இந்த வதந்திகளுக்கு துஷார் தேஷ்பாண்டே விளக்கம் கொடுத்துள்ளார். அதில், அனைத்து லெஜ்ன்ட்கள் மீது மரியாதை வைத்துள்ளேன். இதுபோன்ற மோசமான கருத்துகளை நான் கூறவில்லை. இதுபோல் நான் ஒருநாளும் கூறவும் மாட்டேன் என்று தெரிவித்துள்ளார். என்னதான் சென்னை - மும்பை அணி வீரர்கள் களத்தில் ஆக்ரோஷமாக விளையாடினாலும், களத்திற்கு வெளியில் ஒருநாளும் மோசமாக விமர்சித்ததோ, நடந்துகொண்டதோ இல்லை. திடீரென துஷார் தேஷ்பாண்டே பேசியதாக வதந்திகள் பரவியது சமூக வலைதளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.