For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சிஎஸ்கே பற்றி சொல்லக் கூடாத ரகசியத்தை போட்டு உடைத்த அஸ்வின்.. நடவடிக்கை பாயுமா? விதிமீறல் நடந்ததா?

சென்னை: ஐபிஎல் உலகில், வீரர்கள் ஏலம் என்பது கோடிக்கணக்கான ரூபாய் புழங்கும் ஒரு பரபரப்பான நிகழ்வு. ஆனால், இந்த ஏலத்திற்குப் பின்னால் சில நேரங்களில் நாம் அறியாத பல ரகசியங்களும், ஒப்பந்தங்களும் நடப்பதுண்டு. அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரும், சிஎஸ்கே அணியின் முக்கிய அங்கமுமான ரவிச்சந்திரன் அஸ்வின், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி செய்த ஒரு ரகசிய ஒப்பந்தத்தை வெளியிட்டுள்ளார்.

சிஎஸ்கே அணி, தென்னாப்பிரிக்காவின் இளம் புயல் டெவால்ட் பிரேவிஸை ஒப்பந்தம் செய்ததில், ஏல விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு சில விஷயங்கள் நடந்திருக்கலாம் என்று சந்தேகம் ஏற்பட்டுள்ளது. 2025 ஐபிஎல் தொடரின் இடையே டெவால்ட் பிரேவிஸை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்த போது என்ன நடந்தது என்பதை அஸ்வின் கூறி இருக்கிறார். அதில் சில விதிமீறல்களை அவரை அறியாமல் போட்டு உடைத்துள்ளார். இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

CSK Breaches IPL Rules Ravichandran Ashwin Reveals How Chennai Super Kings Signed Brevis

மாற்று வீரராக வந்த 'பேபி ஏபிடி'

ஐபிஎல் 2025 தொடரின்போது, சிஎஸ்கே அணியின் பந்துவீச்சாளர் குர்ஜப்னீத் சிங் காயமடைந்தார். அவருக்குப் பதிலாக, தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டெவால்ட் பிரேவிஸை சிஎஸ்கே அணி ஒப்பந்தம் செய்தது. ஐபிஎல் விதிகளின்படி, குர்ஜப்னீத் சிங்கின் ஏல விலையான 2.2 கோடி ரூபாய்க்கு பிரேவிஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சிஎஸ்கேவிற்காக 6 போட்டிகளில் விளையாடிய பிரேவிஸ், 180 என்ற மிரட்டலான ஸ்ட்ரைக் ரேட்டில் 225 ரன்கள் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அஸ்வின் உடைத்த ரகசியம்!

இந்நிலையில், தனது யூடியூப் சேனலில் பேசிய அஸ்வின், பிரேவிஸ் ஒப்பந்தத்தின் பின்னணி குறித்து சில ரகசியங்களை உடைத்துள்ளார். அவர் கூறியதாவது: "டெவால்ட் பிரேவிஸை ஒப்பந்தம் செய்ய 2-3 அணிகள் பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அவர்கள் கூடுதல் பணம் கொடுக்கத் தயாராக இல்லாததால், அந்தப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன," என்று அஸ்வின் குறிப்பிட்டார்.

அப்போதுதான் சிஎஸ்கே இந்த பந்தயத்தில் நுழைந்ததாகக் கூறும் அஸ்வின், "ஒரு வீரரை மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யும்போது, அவரது அடிப்படை விலையில்தான் எடுக்க வேண்டும். ஆனால், வீரரின் ஏஜென்டுகளுடன் பேச்சுவார்த்தை நடக்கும். 'நீங்கள் எனக்கு இவ்வளவு கூடுதல் பணம் தந்தால், நான் அணிக்கு வருகிறேன்' என்று வீரர் தரப்பில் கேட்கப்படும். ஏனென்றால், அடுத்த ஆண்டு ஏலத்திற்குச் சென்றால் இதைவிட அதிக தொகைக்கு ஏலம் போவோம் என்பது வீரருக்குத் தெரியும்.

'எனக்கு இப்போது நல்ல விலையைக் கொடுங்கள், இல்லையென்றால் நான் அடுத்த ஆண்டு அதிக விலைக்கு செல்வேன்' என்பதுதான் பிரேவிஸின் நிலைப்பாடாக இருந்தது. சிஎஸ்கே அவர் கேட்ட தொகையைக் கொடுக்கத் தயாராக இருந்தது, அதனால் அவர் வந்தார். இப்போது சிஎஸ்கே கையில் ஒரு கிரீடம் போன்ற வீரர் கிடைத்துள்ளார்" என்று அஸ்வின் கூறியுள்ளார்.

விதிகள் மீறப்பட்டதா?

ஐபிஎல் விதிகளின்படி, ஒரு மாற்று வீரரை ஒப்பந்தம் செய்யும்போது, காயமடைந்த அசல் வீரரின் ஏல விலைக்கு மேல் கொடுக்கக் கூடாது. சிஎஸ்கே பிரேவிஸை 2.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும், அஸ்வினின் பேச்சின்படி, அந்தத் தொகைக்கு மேல் மறைமுகமாக பணம் கைமாறியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது. இது ஐபிஎல் விதிகளை மீறிய செயலாக இருக்குமா என்ற விவாதம் தற்போது சூடுபிடித்துள்ளது.

கிரிக்கெட் உலகில் தனது ஆழமான அறிவிற்கும், நுணுக்கமான பார்வைகளுக்கும் பெயர் பெற்றவர் அஸ்வின். அவரே தனது அணி குறித்து இப்படி ஒரு தகவலை வெளியிட்டிருப்பது, ஐபிஎல் நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து சிஎஸ்கே நிர்வாகமோ அல்லது பிசிசிஐயோ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. அஸ்வின் கிளப்பியுள்ள இந்த புயல், இனிவரும் காலங்களில் ஐபிஎல் வீரர்கள் ஒப்பந்தத்தில் புதிய விதிமுறைகளைக் கொண்டு வர ஒரு காரணமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Story first published: Thursday, August 14, 2025, 17:52 [IST]
Other articles published on Aug 14, 2025
English summary
CSK Breaches IPL Rules? Ravichandran Ashwin Reveals How Chennai Super Kings Signed Brevis
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+