சென்னை: சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி, ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 20வது ஓவரில் மட்டும் 290 பந்துகளை எதிர்கொண்டு 790 ரன்களை குவித்துள்ளது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
16வது ஐபிஎல் சீசன், சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனியின் கடைசி ஐபிஎல் தொடர் என்றே ரசிகர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவே வெளிமாநிலங்களில் சென்னை அணி விளையாடும் போட்டிகளுக்கு கூட அம்மாநில ரசிகர்கள் மஞ்சள் ஜெர்சியில் வந்து ஆதரவு அளித்து வருகின்றனர். பெங்களூரு, ராஜஸ்தான், கொல்கத்தா என்று அனைத்து மாநிலங்களிலும் தோனிக்கு ரசிகர்கள் அளித்த ஆதரவு முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கே ஆச்சரியம் கொடுத்தது.

அதேபோல் கடைசி ஐபிஎல் தொடர் என்பதால், தோனியும் ஃபிட்னெஸில் வேறு மாதிரி களமிறங்கியுள்ளார். அதுமட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் மார்க் வுட், சந்தீப் சர்மா என்று நட்சத்திர பந்துவீச்சாளர்களையும் சிக்சர் விளாசி தோனி ஆச்சரியம் கொடுத்தார். இதனால் தோனியின் பேட்டிங்கை பார்ப்பதற்கே ரசிகர்கள் மைதானத்தில் கூடி வருகின்றனர். ஒவ்வொரு முறையும் தோனி களமிறங்கும் போதும் தோனி.. தோனி.. என்ற கரகோஷம் விண்ணை தொட்டது. இதனிடையே நடப்பு ஐபிஎல் தொடருக்காக ஜனவரி மாதம் முதலே எம்எஸ் தோனி பயிற்சியில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி 2 பந்துகளில் 2 சிக்சர்களை விளாசி தோனி மிரட்டியுள்ளார். ஒவ்வொரு முறையும் கடைசி ஓவரில் தோனியால் மட்டுமே சிக்சர் அடிக்க முடிவது கூடுதல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடைசி ஓவரில் சாம் கரண் வீசிய 5வது பந்தில் ஆஃப் சைட் திசையில் சிக்சர் விளாசினார். 5வது பந்து ஆஃப் சைட் திசையில் வீசப்பட்டதால், கடைசி பந்து நிச்சயம் யார்க்கர் வீசுவதற்கே அதிக வாய்ப்புகள் இருந்ததை தோனி கணித்திருந்தார்.
இதனால் சாம் கரண் பந்துவீசுவதற்காக ஓடி வரும் போதே, லெக் சைட் திசையில் சிக்சர் அடிக்க தோனி தயாரானார். சரியாக யார்க்கர் வீச சாம் கரண் முற்பட, அதனை தோனி அசால்ட்டாக சிக்சர் அடித்தார். ஜடேஜா போன்ற வீரர்களே ஃபினிஷிங்கில் சொதப்பி வரும் சூழலில், தோனி 41 வயதிலும் எளிதாக சிக்சர்களை விளாசுவது தோனி ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் 20வது ஓவரில் இதுவரை 290 பந்துகளை விளையாடியுள்ள தோனி, 790 ரன்களை குவித்துள்ளார். அதில் 59 சிக்சர்களும், 49 பவுண்டரிகளும் அடங்கும்.