அகமதாபாத்: சென்னை அணி 5வது முறையாக ஐபிஎல் கோப்பையை வெல்ல காரணமாக அமைந்தா ஜடேஜாவை, கேப்டன் தோனி தூக்கி வைத்து கொண்டாடிய காட்சிகள் ரசிகர்களிடையே ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் இறுதிப்போட்டியில் குஜராத் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடியது. இதில் டாஸ் வென்ற சென்னை அணி கேப்டன் தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து பேட்டிங் செய்த குஜராத் அணி சாய் சுதர்சன் மற்றும் சாஹாவின் அதிரடியான அரைசதத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 214 ரன்கள் குவித்தது.

இதையடுத்து சென்னை அணியின் பேட்டிங்கின் போது மழை குறுக்கிட்டதால், ஆட்டம் 15 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இதனால் சென்னை அணி 15 ஓவர்களில் 171 ரன்கள் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதனால் கடைசி 2 பந்துகளில் சிஎஸ்கே வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா சிக்சர் மற்றும் பவுண்டரி விளாசி சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை வென்று கொடுத்தார். இதன் மூலம் சென்னை அணி 5வது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.
கடைசி பந்தில் பவுண்டரியை விளாசிய பின்னர், ஜடேஜா நேராக சிஎஸ்கே வீரர்களை நோக்கி ஓடிச் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். ஆனால் கடைசி பந்தை பார்க்க முடியாமல் தல தோனி தனது தலையை கீழே போட்டு கண்களை மூடிக் கொண்டார். சிஎஸ்கே வென்ற பின், சில நொடிகள் கண்களை திறக்காத தோனி, வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட பின்னரே தோனி கண்களை திறந்தார். அப்போது ஜடேஜா நேராக தோனியை நோக்கி ஓடி வந்தார்.
அதனை பார்த்த தோனி, உடனடியாக ஜடேஜாவை தூக்கி வைத்து கொண்டாடினார். கடந்த ஐபிஎல் தொடரை வென்ற போது கூட அமைதியாக கொண்டாடிய நிலையில், இந்த சீசனில் ஜடேஜாவை தூக்கி வைத்து கொண்டாடியுள்ளார். தோனியின் கடைசி சீசனாக இந்த சீசன் பார்க்கப்பட்ட நிலையில், ஜடேஜாவை தோனி தூக்கி வைத்து கொண்டாடியுள்ளது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளாது. அதுமட்டுமல்லாமால் தோனிக்கு பின் ஜடேஜாவே அணியை வழிநடத்துவார் என்றும் மறைமுக பொருளாக தோனியின் கொண்டாட்டம் அமைந்துள்ளது.