தோனி காயமா உண்மை என்ன? சிஎஸ்கே சிஇஒ காசி வெளியிட்ட அப்டேட்.. களம் இறங்குவாரா தல?
அகமதாபாத் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணியை நாளை எதிர்கொள்கிறது. இந்த போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு கேப்டன் தோனி சென்னையில் விளையாட உள்ளதால் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இந்த நிலையில் அகமதாபாத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி காயம் காரணமாக விளையாட மாட்டார் என்ற தகவல் பரவியது. இதனால் சிஎஸ்கே ரசிகர்கள் கலக்கமடைந்தனர். இவ்வளவு நாள் தோனியை பார்க்க காத்திருந்த நாட்கள் அனைத்தும் வீணாகி விடுமோ என்ற சோகத்தில் இருந்தனர்.

தோனி இல்லையென்றால் சிஎஸ்கே அணியின் கேப்டன் யார் ? விக்கெட் கீப்பர் யார் என்ற பல கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. முதல் போட்டியே இப்படி ஆகணுமா என்று ரசிகர்கள் வாட்ஸ் அப்பில் சோக ஸ்டேட்டஸ் வைக்க தொடங்கி விட்டனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் தோனி தொடர்பான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதில் தோனிக்கு காயம் ஏற்பட்டதாக வந்த செய்தியை திட்டவட்டமாக அவர் மறுத்துள்ளார். மேலும் தோனி 100 சதவீதம் உடல் தகுதியுடன் இருப்பதால் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயமாக அவர் பங்கேற்பார் என்று காசி விஸ்வநாதன் கூறியுள்ளார். இந்த ஐபிஎல் தொடருக்காக தோனி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இதனால் 90 சதவீதம் உடல் தகுதியில் இருந்தால் கூட கேப்டன் தோனி களத்தில் விளையாடுவார் என்று சில ரசிகர்கள் நம்பிக்கையோடு இருந்தார்கள். அவர்களது நம்பிக்கையை காப்பாற்றும் வகையில் காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். இதனால் தல தோனியின் ஹெலிகாப்டர் அகமதாபாத்தில் களமிறங்குவது உறுதியாகிவிட்டது.
இந்த நிலையில் தோனியையும் சிஎஸ்கே வையும் பிடிக்காத சிலர் இது போன்ற வதந்திகளை ஏற்படுத்திவிட்டு அணியின் உத்வேகத்தை குலைக்க முயற்சி செய்கிறார்களோ என்ற சந்தேகமும் சிஎஸ்கே ரசிகர்கள் மத்தியில் உள்ளது. எப்படி இருந்தாலும் நாளை தோனியின் தரிசனத்திற்காக சிஎஸ்கே ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். இதற்காக சிலர் அகமதாபாத் வரை சென்று இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications