ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இறுதிப் போட்டியை நினைத்தாலே கொஞ்சம் பதற்றமாக இருக்கிறது என்று சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2023 ஆம் ஆண்டு தொடரின் சாம்பியன் பட்டத்தை வெல்ல சிஎஸ்கே, குஜராத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த பயிற்சியாளர் பிளமிங், குஜராத் அணியில் சுப்மன் கில் அற்புதமாக விளையாடுகிறார் என்பதில் மாற்று பேச்சே இல்லை. ஆனால் சுப்மன் கில்லை விரைவில் வீழ்த்தினால், நடுவரிசை வீரர்களுக்கு பந்து வீசி நெருக்கடிகளை ஏற்படுத்த முயற்சி செய்யலாம்.

ஆனால், அதற்கு சுப்மன் கில்லை நாங்கள் முதலில் வீழ்த்த வேண்டும். அவருடைய விக்கெட்டை வீழ்த்த, நாங்கள் எங்களுடைய சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். இறுதிப் போட்டியை பற்றி நினைத்தால கோப்பையை கைப்பற்றும் கனவு தான் மேலோங்கி இருக்கிறது.
ஆனால், அதை பற்றி யோசிக்காமல், போட்டியில் மட்டும் கவனம் செலுத்துவது கொஞ்சம் கடினமான காரியம் தான். இறுதிப் போட்டி வரை வந்ததே பெருமையாக கருதுகிறேன். அதன் பிறகு நாம் எப்படி விளையாடுகிறோம் என்பது பொருட்டு தான் முடிவுகள் அமையும்.
எங்கள் அணியை பொறுத்தவரை வீரர்கள் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தால் மட்டுமே பந்துவீச்சாளர்களால் சரியாக செயல்பட முடியும். சிஎஸ்கேவின் தொடக்க வீரர்கள் நல்ல பார்மில் இருந்தாலும், அவர்களை தாண்டியும் அனுபவமிக்க வீரர்கள் எங்கள் அணியில் இருக்கிறார்கள். ஐபிஎல் இறுதிப் போட்டியை மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தாலும், கொஞ்சம் பதற்றமாகவும் தான் இருக்க செய்கிறது என்று பிளமிங் கூறியுள்ளார்.