சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் டீல்.. ஹர்திக் பாண்டியாவை வாங்க தோனி முன்னிலையில் பேச்சுவார்த்தை
மும்பை: 2027 ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் பரிமாற்றத்துக்கான நேரம் துவங்கி உள்ள நிலையில், இந்திய அணியின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவைத் தங்கள் அணியில் சேர்க்க சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றன. ஆனால், இதில் சிஎஸ்கே அணியே தற்போது முன்னிலையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026 ஐபிஎல் தொடர் முடிந்த உடனேயே மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகும் தனது விருப்பத்தை ஹர்திக் பாண்டியா தெரிவித்தார். இதை அடுத்து, அவரைத் தங்கள் அணியில் இணைக்க சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய 3 அணிகளும் கடும் போட்டியில் இறங்கின. இதில் டெல்லி அணியின் வாய்ப்பை ஹர்திக் நிராகரித்ததால், சிஎஸ்கே மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே மட்டுமே போட்டி நிலவியது.

தற்போது வெளியாகி உள்ள தகவல்களின்படி, மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஆரம்பத்தில் ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக சிவம் துபே மற்றும் ஆயுஷ் மத்ரே அல்லது டெவால்ட் பிரெவிஸ் ஆகியோரை மும்பை இந்தியன்ஸ் அணி கேட்டது. ஆனால் இதற்கு சிஎஸ்கே ஒப்புக் கொள்ளவில்லை. இதையடுத்து, சிவம் துபே மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோரைத் தர சிஎஸ்கே முன் வந்துள்ளது. இதற்கு மும்பை இந்தியன்ஸ் அணி சம்மதம் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த பேச்சுவார்த்தைகளை தோனி நேரடியாகக் கவனித்து வருவதாகத் தெரிகிறது. இந்த ஒப்பந்தம் உறுதியானால், 2027 ஐபிஎல் தொடரில் ஹர்திக் பாண்டியா சிஎஸ்கே அணியிலும், சிவம் துபே மற்றும் அன்ஷுல் கம்போஜ் மும்பை இந்தியன்ஸ் அணியிலும் விளையாடுவார்கள்.
மறுபுறம், 2027 ஐபிஎல் தொடருக்கான ஆயத்தப் பணிகளை சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் தற்போதே தொடங்கிவிட்டன. இதற்காக ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் இருந்து இந்த அணிகள் தங்களது வீரர்களுக்கு உடற்தகுதி முகாம்களை நடத்த உள்ளன. டெல்லி அணி ஆகஸ்ட் தொடக்கத்திலும், ஹைதராபாத் அணி ஆகஸ்ட் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளிலும் முகாம்களை நடத்த உள்ளன. சிஎஸ்கே அணி வீரர்களின் வசதிக்கேற்ப மூன்று நாட்கள் கொண்ட பிரிவுகளாக உடற்தகுதி முகாம்களை நடத்தத் திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

