லண்டன்: இந்தியாவில் ஐபிஎல் தொடரை போல் இங்கிலாந்தில் The Hundred லீக் நடத்தப்பட்டு வருகிறது. இதில் ஐபிஎல் உரிமையாளர்களான சிஎஸ்கே ரூபா குருநாத், மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆகாஷ் அம்பானி, கொல்கத்தா அணியின் ஷாருக் கான், ஐதராபாத் அணியின் காவ்யா மாறன் உள்ளிட்டோர் முதலீடு செய்வதற்கான முதற்கட்ட பணிகளில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இங்கிலாந்து நடத்தப்பட்டு வரும் The Hundred லீக் தொடர் ரசிகர்களிடையே போதிய வரவேற்பை பெறவில்லை. 100 பந்துகளை மட்டுமே கொண்டு நடத்தப்பட்டு இந்த லீக் தொடரில், சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்ற போது, அந்தந்த அணிகளுக்கு பெரியளவில் லாபம் கிடைக்கவில்லை. இதன் 100 சதவிகித பங்குகள் இங்கிலாந்து அணி நிர்வாகத்திடம் உள்ளது.

இதனால் ஹன்ட்ரட் லீக் தொடரில் விளையாடி வரும் அணிகளில் முதலீடு செய்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் பல்வேறு தரப்பினருக்கும் அழைப்பு விடுத்து வந்தது. குறிப்பாக ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் ஹன்ட்ரட் லீக் தொடரில் முதலீடு செய்தால், நிச்சயம் அந்தந்த அணிகள் அடுத்தக் கட்ட வளர்ச்சியை நோக்கி பயணிக்கும். இதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஹன்ட்ரட் லீக் தொடரில் முதலீடு செய்வதற்கான முதற்கட்ட பணிகள் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அணிகளின் 49 சதவிகித பங்குகளை விற்பனை செய்ய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு எடுத்துள்ளது. அதேபோல் ஒவ்வொரு அணிகளின் மதிப்பாக சுமார் ரூ.900 கோடி முதல் ரூ.1,100 கோடி வரை கணக்கிடப்பட்டுள்ளது.
இதனிடையே முதற்கட்ட ஏலத்தில் சிஎஸ்கே, சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ அணி, மும்பை, கேகேஆர் மற்றும் டெல்லி ஆகிய அணிகள் தரப்பில் ஏலத்திற்கான தொகை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதேபோல் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தரப்பில் ஏலத்தில் பங்கேற்கிறார்களா என்பது உறுதி செய்யப்படவில்லை. அதேபோல் மகளிர் பிரீமியர் லீக்கில் முதலீடு செய்துள்ள யுபி வாரியர்ஸ் அணியும் ஏலத்தில் பங்கேற்றுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்களில் ஒருவரான அவ்ரம் கிளேசர் லான்சர் கேபிட்டல்ஸ் நிர்வாகமும் ஏலத்தில் பங்கேற்றுள்ளது. வழக்கம் போல் பஞ்சாப் மற்றும் ஆர்சிபி அணிகள் முதலீடு செய்வதில் இருந்து விலகியுள்ளன. இதுகுறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தரப்பில் கூறுகையில், முதற்கட்ட ஏலம் என்பதால் 8 அணிகளில் எந்த அணியில் முதலீடு செய்கிறோம் என்பதை யாரும் கூற தேவையில்லை.
ஐபிஎல் ஏலம் முடிவடைந்த பின், அடுத்தக் கட்ட ஏலத்திற்கான பணிகள் தொடங்கும். அப்போது தான் அனைத்து வகையான பேச்சுவார்த்தைகளும் தொடங்கும். 49 சதவிகித பங்குகள் விற்பனை செய்யப்பட்டாலும், மீதமுள்ள 51 சதவிகித பங்குகள் கவுண்டி அணிகளிடம் தான் இருக்கும். அவர்களும் இணைந்தே அணியை வழிநடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே எம்எல்சி, எஸ்ஏ20 லீக் மற்றும் ஐஎல்டி20 மூலமாக ஏராளமான கிரிக்கெட் வீரர்களை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா நிர்வாகங்கள் மட்டுமே பிசிசிஐ-க்கு சவாலாக இருந்து வந்த சூழலில், தற்போது ஹன்ட்ரட் லீக்கில் ஐபிஎல் உரிமையாளர்கள் முதலீடு செய்ய உள்ளனர். இதனால் இங்கிலாந்து வீரர்களையும் ஐபிஎல் உரிமையாளர்கள் கட்டுப்படுத்த வாய்ப்பு கிடைத்திருப்பதாக பார்க்கப்படுகிறது.