சென்னை: பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரர் கான்வே 30 பந்துகளில் அரைசதம் விளாசி அசத்தியுள்ளார். இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் கான்வே 5வது அரைசதத்தை விளாசி அசத்தியுள்ளார்.
16வது ஐபிஎல் தொடரின் 41வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்த்து சென்னை அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். சென்னை அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாமல், கடந்த போட்டியில் ஆடிய அதே அணியுடன் களமிறங்கியது.

இதனைத் தொடர்ந்து சென்னை அணி சார்பாக ருதுராஜ் கெய்க்வாட் - கான்வே இணை வழக்கம் போல தொடக்க வீரர்களாக களமிறங்கியது. முதல் இரு ஓவர்களில் நிதானம் காட்டிய சென்னை அணி, 3வது ஓவரில் இருந்து அதிரடியை தொடங்கியது. 5 ஓவர்கள் முடிவில் 41 ரன்கள் எடுத்திருந்தது. இதனால் பவர் பிளேவின் கடைசி ஓவரில் அதிரடியாக ஆட வேண்டிய தேவை இருந்தது.
அந்த ஓவரில் 16 ரன்கள் விளாசப்பட, 6 ஓவர்கள் முடிவில் சென்னை அணி விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் அடித்தது. இதன் பின்னர் ஒவ்வொரு ஓவரிலும் கான்வே சிக்சரும், பவுண்டரியுமாய் விளாச, சென்னை அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. இதனிடையே ருதுராஜ் கெய்க்வாட் 37 ரன்களில் ஆட்டமிழக்க, கான்வே அதிரடியை தொடர்ந்தார். இதனால் 30 பந்துகளில் அரைசதம் அடித்து கான்வே மிரட்டினார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் டெவான் கான்வே அடிக்கும் 5வது அரைசதம் இதுவாகும். ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தொடர்ச்சியாக 4 அரைசதங்கள் விளாசி மிரட்டி இருந்தார். ஆனால் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் மிஸ்ஸானது. இந்த நிலையில் பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றையப் போட்டியில் மீண்டும் கான்வே அரைசதம் விளாசியுள்ளார். கான்வேவின் ஆட்டத்தை பார்த்து வரும் ரசிகர்கள், சென்னை அணியின் பேட்டிங் பயிற்சியாளரான மைக் ஹசியை பார்ப்பது போலவே இருப்பதாக பாராட்டி வருகின்றனர்.