சென்னை: சென்னை அணியின் நட்சத்திர தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட், ராஜஸ்தான் அணியின் போல்ட் பந்துவீச்சில் 3 முறை ஆட்டமிழந்துள்ளது ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.
16வது சீசனுக்கான ஐபிஎல் தொடரின் 17வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்த்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடுகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டி என்பதால் ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல் சேப்பாக்கம் மைதானம் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்பதால், சென்னை அணியின் கைகள் ஓங்கியே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ராஜஸ்தான் அணியில் அஸ்வின், சாஹல், ரியான் பராக் உள்ளிட்ட சுழல் பந்துவீச்சாளர்கள் இருப்பதால், சிஎஸ்கே பேட்ஸ்மேன்களின் ஆட்டம் சிறப்பாக இருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடப்பு ஐபிஎல் தொடரில் உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார் ருதுராஜ் கெய்க்வாட். இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 189 ரன்கள் விளாசியுள்ளார். வழக்கமாக நிதானமாக ஆடிவிட்டு, அதிரடிக்கு மாறும் ருதுராஜ், இம்முறை 2வது ஓவரிலேயே வெளுக்க தொடங்கியுள்ளார்.
இதனால் ருதுராஜ் கெய்க்வாட்டை கட்டுப்படுத்த எதிரணிகள் திட்டமிட்டு வருகின்றன. இதனிடையே ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் போல்ட்-க்கு எதிராக ருதுராஜ் கெய்க்வாய் திணறியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை போல்ட்-க்கு எதிராக 4 போட்டிகளில் விளையாடியுள்ள ருதுராஜ், அவர் பந்துவீச்சில் 22 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் போல்ட் பந்துவீச்சில் 24 பந்துகளை சந்திதுள்ள ருதுராஜ் 17 டாட் பால்களை விளையாடியுள்ளார். அதேபோல் 3 முறை போல்ட் ருதுராஜ் கெய்க்வாட்டை வீழ்த்தியுள்ளார்.

இது சிஎஸ்கே ரசிகர்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் நடப்பு ஐபிஎல் தொடரில் 3 போட்டிகளில் போல்ட் முதல் ஓவரை வீசியுள்ளார். அதில் இருமுறை முதல் ஓவரிலேயே இரு விக்கெட்டுகளை வீழ்த்தி எதிரணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளார். இதனால் போல்ட் பந்துவீச்சை ருதுராஜ் கெய்க்வாட் எப்படி எதிர்கொள்ள போகிறார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் சேப்பாக்கம் மைதானத்தில் பவர் பிளே ஓவர்களில் ஸ்விங் எடுபடும் என்பது குறிப்பிடத்தக்கது.