டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 12வது முறையாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பிளே ஆப் சற்றுக்கு அதிக முறை தகுதி பெற்ற ஒரே அணி என்ற பெருமையை சிஎஸ்கே தக்க வைத்து கொண்டுள்ளது.
வாழ்வா சாவா என்ற கட்டத்தில் டாஸ் வென்ற கேப்டன் தோனி, பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர் ருதுராஜ், கான்வே ஆகியோர் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.

இருவரும் அடுத்தடுத்து அரைசதம் கடக்க, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 141 ரன்கள் சேர்த்தது. கான்வே 52 பந்தில் 87 ரன்களும், ருதுராஜ் 50 பந்தில் 79 ரன்களும் சேர்த்து பெவிலியன் திரும்பினர். இறுதியில் சிவம் துபே 9 பந்தில் 22 ரன்களும், ஜடேஜா 7 பந்தில் 20 ரன்கள் சேர்க்க, 20 ஓவர் முடிவில் சிஎஸ்கே அணி 3 விக்கெட் இழப்பிற்கு 223 ரன்கள் எடுத்தது.
224 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியில் பிரித்வி ஷா 5 ரன்களில் ராயுடுவின் அபார கேட்சால் ஆட்டமிழந்தார். பில் சால்ட் 3 ரன்களிலும், ரூசோவ் ட்க் அவுட்டாகியும் ஆட்டமிழக்க, டெல்லி அணியின் தோல்வி உறுதியானது. மற்ற வீரர்கள் யாரும் நிலைத்து நிற்க தவறினர். ஆனால் தனி ஆளாக வார்னர் மட்டும் போராடி 58 பந்தில் 86 ரன்கள் சேர்த்தார்.இதில் 5 சிக்சர், 7 பவுண்டரிகளும் அடங்கும்.
மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேற, டெல்லி அணியால் 20 ஓவர் முடிவில் 146 ரன்களுக்கு 9 விக்கெட் இழந்து தோல்வியை தழுவியது. இதன் மூலம் சிஎஸ்கே அணி 77 ரன்கள் வித்தியாசத்தில் வென்று 17 புள்ளிகளுடன் பிளே ஆப் சுற்றில் உள்ளது. ரன் ரேட்டும் 0.62 ஆக உள்ளது. தீபக் சாஹர் 3 விக்கெட்டும், பதிரானா, தீக்சனா தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனையடுத்து, சிஎஸ்கே அணி 12வது முறையாக பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.