என்னாது.. சென்னை சூப்பர் கிங்ஸ்ல 3 வீரர்கள் விடுவிப்பா? முக்கியமான வீரர்கள் கிடையாதுல்ல?!
Recommended Video

சென்னை : மூன்று வீரர்களை தங்கள் அணியில் இருந்து விடுவித்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.
2019 ஐபிஎல்-க்கான அணி மாற்றங்கள் நடைபெற்று வருகின்றன. நவம்பர் 15 அன்று ஐபிஎல் அணிகள் தங்கள் அணிகளில் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியலை அளிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
அதையொட்டி தங்கள் அணியில் இருந்து சில வீரர்களை ஐபிஎல் அணிகள் விடுவித்து வருகின்றன. நேற்று கொல்கத்தா அணியின் ஸ்டார்க் விடுவிக்கப்பட்ட செய்தியும் வெளியானது.

3 வீரர்கள் விடுவிப்பு
சிஎஸ்கே அணியில் இங்கிலாந்து நாட்டு வீரர் மார்க் வுட் மற்றும் இரண்டு உள்ளூர் வீரர்களான கனிஷ்க் செத், ஷிடிஸ் சர்மா ஆகிய மூவர் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மார்க் வுட் சென்ற ஐபிஎல் தொடரில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே ஆடும் வாய்ப்பை பெற்றார். பந்துவீச்சாளரான அவர் அந்த ஒரு வாய்ப்பிலும் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை. மற்ற இரண்டு வீரர்களும் களம் இறங்கும் வாய்ப்பை பெறவில்லை.

22 வீரர்கள் தொடர்வார்கள்
மொத்தம் 25 வீரர்கள் கொண்ட சிஎஸ்கே அணியில் இந்த மூன்று வீரர்கள் தவிர, மற்ற 22 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர். சென்ற ஆண்டு கேதார் ஜாதவுக்கு மாற்றாக தேர்வு செய்யப்பட்ட இங்கிலாந்து அணியின் ஆல்-ரவுண்டர் டேவிட் வில்லி சிஎஸ்கே அணியில் இந்த ஆண்டும் தொடர்கிறார்.

சிஎஸ்கே-வின் முக்கிய வீரர்கள்
தோனி, சுரேஷ் ரெய்னா, பிராவோ, ஜடேஜா, அம்பதி ராயுடு, ஷேன் வாட்சன் உள்ளிட்ட சிஎஸ்கே அணியின் முக்கிய வீரர்களை அடுத்த ஆண்டும் நாம் கண்டு மகிழலாம். தற்போதுள்ள 22 வீரர்கள் தவிர்த்து, ஏலத்தில் புதிய வீரர்களை எடுக்கவும் வாய்ப்பு இருக்கிறது.

நிரூபித்த சிஎஸ்கே அணி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்ற சீசனில் கோப்பை வென்ற அதே அணியுடன் களம் இறங்க விரும்புவது தெரிகிறது. சென்ற சீசனில் வயதானவர்கள் அணி என கேலி செய்யப்பட்ட சிஎஸ்கே அணி, நாங்கள் வயதானவர்கள் அல்ல, அனுபவம் வாய்ந்தவர்கள் அணி என நிரூபித்தது. இந்த ஆண்டும் சிஎஸ்கே தோனி தலைமையில் கோப்பை வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications