For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

பேட்டிங்கில் சொதப்பி பவுலிங் மூலம் மும்பையை வீழ்த்திய சென்னை

By Staff

சென்னை: மும்பை இந்தியன்ஸ் அணியின் தொடர் வெற்றிக்கு நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் முற்றுப் புள்ளி வைத்து அசத்தல் வெற்றியைப் பெற்றது.

சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும், சென்னை சூப்பர் கிங்ஸுக்கும் இடையிலான ஆட்டம் நடைபெற்றது.

மும்பை அணி ஒரு போட்டியில் மட்டுமே தோற்று தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்த அணியாகும். இதனால் நேற்றைய போட்டியிலும் மும்பையின் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கப்பட்டது.

டாஸ் வென்ற சென்னை கேப்டன் டோணி முதலில் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஹெய்டனும், முரளி விஜய்யும் களம் இறங்கினர். கடந்த 2 போட்டிகளில் கலக்கிய முரளி விஜய் நேற்றும் அசத்துவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக 14 ரன்களில் அவுட் ஆனார் முரளி.

அதேசமயம், மாத்யூ ஹெய்டன் நிதானமாக ரன் குவிக்கத் தொடங்கினார். அவரும் ரெய்னாவும் சேர்ந்து ரன்களைக் குவித்து வந்தனர். இந்த நிலையில் ரெய்னா 23 ரன்களில் வீழவே ஹெய்டன் 35 ரன்களைக் குவித்து விட்டு ஆட்டமிழந்தார்.

பின்னர் வந்த கேப்டன் டோணி 31 ரன்களைக் குவித்து வெளியேறினார். கடைசி நேரத்தில் பத்ரிநாத்தும், மைக்கேல் ஹஸ்ஸியும் இணைந்து ரன்களைக் குவிக்க முயற்சித்தனர். இவர்களில் பத்ரியின் ஆட்டம் சிறப்பாக இருந்தது.

22 பந்துகளைச் சந்தித்த பத்ரிநாத் 30 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹஸ்ஸியின் பங்கு 14 ஆகும்.

இறுதியில் 20 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 165 ரன்களை எடுத்தது சென்னை.

பேட்டிங்கில் சென்னை நேற்று பிரமாதமாக ஜொலிக்கவில்லை. இதனால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்திருந்தனர். ஆனால் பவுலிங்கில் தங்களது விஸ்வரூபத்தைக் காட்டி விட்டனர் சென்னை அணியினர்.

166 என்ற இலக்குடன் களம் இறங்கிய மும்பை அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவன் துஷாரா பந்தில் 16 ரன்களில் வீழ்ந்தார். மறுபக்கம் அடித்து ஆடி வந்த கேப்டன் டெண்டுல்கர், 38 ரன்கள் எடுத்திருந்தபோது மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் பாதியிலேயே வெளியேறினார்.

மும்பை அணி தொடக்கத்திலிருந்தே தடுமாறியபடிதான் இருந்தது. ஒரு கட்டத்தில் 1 விக்கெட் இழப்புக்கு 62 என்ற நல்ல நிலையில்தான் இருந்தது. ஆனால் பின்னர் மளமளவென விக்கெட்கள் சரிந்து 7 விக்கெட் இழப்புக்கு 92 ரன்கள் என்ற பரிதாப நிலையை எட்டியது.

அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்து வந்தபோது மீண்டும் ஆட வந்தார் டெண்டுல்கர். இருப்பினும் 45 ரன்கள் எடுத்திருந்தபோது துஷாரா பந்தில் முரளி விஜய்யிடம் கேட்ச் கொடுத்து வீழ்ந்தார்.

கடைசி நேரத்தில் வெற்றிக்காகப் போராடிப் பார்த்தார் ஹர்பஜன் சிங். அடித்து ஆடிய அவர் 33 ரன்களைக் குவித்தார். ஆனாலும் பயன் இல்லை. ஆட்டத்தின் கடைசிப் பந்தில் ஆட்டமிழந்தார் ஹர்பஜன்.

சென்னை அணியின் அபாரப் பந்து வீச்சு மற்றும் பீல்டிங் காரணமாக மும்பை அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 141 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்த்து. இதனால் 24 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை வென்றது.

இந்த வெற்றி சென்னைக்குக் கிடைத்த 5வது வெற்றியாகும். மேலும் சென்னை மைதானத்தில் தொடர்ந்து பெற்ற 3வது வெற்றியாகும். மும்பைக்கு இது 2வது தோல்வியாகும்.

தற்போது 10 புள்ளிகளுடன் சென்னை அணி 4வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

Story first published: Wednesday, December 7, 2011, 18:37 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+