சென்னை : கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் பதிரானா களமிறங்குவாரா என்ற கேள்விக்கு அந்த அணியின் பவுலிங் ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் பதில் அளித்துள்ளார்.
17வது ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி இதுவரை 4 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 2 தோல்விகளுடன் உள்ளது. ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று அனைத்து துறைகளிலும் மோசமாக செயல்பட்டன. இந்த நிலையில் சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கும் போட்டியில் கேகேஆர் அணியை எதிர்த்து சிஎஸ்கே அணி களமிறங்கவுள்ளது.

கவுதம் கம்பீரின் வருகையால் கேகேஆர் அணி உச்சக்கட்ட ஃபார்மில் விளையாடி வருகிறது. கடந்த சீசனிலேயே சேப்பாக்கம் மைதானத்தில் ஆடிய போட்டியில் கேகேஆர் அணி சிஎஸ்கே அணியை வீழ்த்தி இருந்தது. மறுபுறம் சிஎஸ்கே அணியின் நட்சத்திர பவுலர்களான பதிரானா காயம் காரணமாக கடந்த போட்டியில் விளையாடவில்லை. முஸ்தாஃபிசுர் ரஹ்மான் வங்கதேசத்தில் இருந்து எப்போது வருவார் என்று தெரியாமல் உள்ளது.
இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் பவுலிங் ஆலோசகர் எரிக் சிம்மன்ஸ் பேசுகையில், சிஎஸ்கே அணியில் பவுலர்கள் களத்தில் எப்படி பவுலிங் செய்தனர் என்பதை தான் பார்ப்போமே தவிர, எவ்வளவு ரன்கள் விட்டுக் கொடுத்தார்கள் என்பதை பார்ப்பதில்லை. முகேஷ் சவுத்ரி கடந்த போட்டியில் அந்த ஓவரை மோசமாக வீசவில்லை. சில பவுண்டரிகள் சென்ற போது, திட்டங்களை கொஞ்சம் மாற்றியிருக்க வேண்டும்.
அவர் 2022 சீசனில் தொடங்கும் போதும் பெரியளவில் சோபிக்கவில்லை. ஆனால் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்த போது, அவரால் என்ன செய்ய முடியும் என்று அனைவருக்கும் காட்டினார். நிச்சயம் அவர் தங்கத்தை போல் ஜொலிப்பார். கேகேஆர் அணிக்கு எதிரான போட்டியில் பதிரானா விளையாடுவது பிசியோ-வின் அறிக்கையை பொறுத்து தான் முடிவு எடுக்கப்படும்.
பதிரானாவை விளையாட வைக்க அவசரம் காட்டினால், பிரச்சனை இன்னும் மோசமாகிவிடும். அதனால் பிசியோவின் ஆலோசனைக்கு பின், போட்டிக்கு முன்பாக பதிரானா களமிறங்குவாரா என்பது முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். அமெரிக்கா விசா பிரச்சனையை சரி செய்வதற்காக வங்கதேசம் சென்ற முஸ்தாஃபிசுர் ரஹ்மான் நேற்றிரவு சிஎஸ்கே அணியினருடன் இணைந்தார் என்று தெரிய வந்துள்ளது.