சென்னை: லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றதை தொடர்ந்து, சோசியல் மீடியாவில் தோனி ரசிகர்களின் அலப்பறை உச்சத்தில் இருக்கிறது. அதிலும் நீண்ட இடைவேளைக்கு பின் கேப்டன்சி, விக்கெட் கீப்பிங், பேட்டிங் என்று தோனி அமர்க்களம் செய்திருக்கிறார். இதனால் தோனியை கிண்டல் செய்த மும்பை ரசிகர்களுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரின் 30வது லீக் போட்டியில் லக்னோ அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வியடைந்ததால், சென்னை அணி மீது விமர்சனங்கள் அதிகரித்தது. குறிப்பாக 44 வயதை எட்டிய தோனி, இளம் வீரர்களுக்கு வழிவிட்டு ஓய்வு பெற்றிருக்க வேண்டும் என்று மும்பை ரசிகர்கள் கிண்டல் செய்து வந்தனர்.

இந்த சீசனில் தோனியை ரூ.4 கோடிக்கு தக்க வைத்ததே சிஎஸ்கே அணியின் தோல்விக்கு காரணம் என்றும், அவரது இடத்தில் ஒரு இளம் ஹிட்டர் இடம்பெற்றிருக்க வேண்டும் என்று கூறி வந்தனர். அதேபோல் தோனியும் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், சிஎஸ்கே அணியில் மோசமான மிடில் ஆர்டரே தோல்விக்கு காரணமாக அமைந்தது.
ஆனாலும் மும்பை மற்றும் ஆர்சிபி அணியின் ரசிகர்கள் தோனி மீதான வன்மத்தை வெளிப்படுத்தி வந்தனர். ஒரு கட்டத்தில் சிஎஸ்கே அணி தோனியை 5 ஆண்டுகளாக சுமந்து வருவதாக விமர்சிக்க தொடங்கினர். இந்த நிலையில் லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் தோனி 11 பந்துகளில் ஒரு சிக்ஸ், 4 பவுண்டரின் உட்பட 26 ரன்களை விளாசி அசத்தினார்.
இந்த சீசனில் தோனியின் பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் ஃபார்ம் சிறப்பாகவே அமைந்துள்ளது. அவரால் ஸ்பின்னர்களை எதிர்த்து சில ஷாட்களை விளையாட முடியவில்லை என்றாலும், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சிம்ம சொப்பனமாக இருந்து வருகிறார். இதனால் தோனியை கிண்டல் செய்த மும்பை அணி ரசிகர்களுக்கு சிஎஸ்கே ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அதிலும் சிஎஸ்கே அணி தோனியை சுமப்பதை விடவும், மும்பை அணி ஏன் ரோஹித் சர்மாவை சுமந்து வருகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளனர். ஏனென்றால் இந்த சீசனில் ரோஹித் சர்மா ஆடிய 5 போட்டிகளில் ஒருமுறை கூட 20 ரன்களை கடக்கவில்லை. அதேபோல் 2020ஆம் ஆண்டு முதல் ரோஹித் சர்மா ஒருமுறை கூட 400 ரன்களை எட்டவில்லை.
இத்தனைக்கும் மும்பை அணியின் தொடக்க வீரராக ரோஹித் சர்மாவே விளையாடி வருகிறார். அதேபோல் 2024 ஐபிஎல் தொடரை தவிர்த்து, கடந்த 6 ஆண்டுகளாக ரோஹித் சர்மாவின் ஸ்ட்ரைக் ரேட் வெறும் 130க்குள் மட்டுமே உள்ளது. அதுமட்டுமல்லாமல் ஹர்திக் பாண்டியாவுக்கு ரோஹித் சர்மா கொடுத்து வரும் பிரச்சனைகள் குறித்து நாடே அறிந்த ஒன்றுதான்.
இதனால் சிஎஸ்கே அணி தோனியை சுமப்பதற்கு கொடுக்கும் விலையை விடவும், மும்பை அணி ரோஹித் சர்மாவை சுமப்பதற்கு கொடுக்கும் விலை அதிகம் என்று கொந்தளித்து வருகின்றனர். அதேபோல் தோனி விக்கெட் கீப்பிங்கில் இப்போதும் கில்லியாக இருப்பதாக கூறி வரும் சிஎஸ்கே ரசிகர்கள், ரோஹித் சர்மாவின் ஃபீல்டிங் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். இதனால் சோசியல் மீடியாவில் கலவரமாக மாறி இருக்கிறது.