CSK vs MI: சஞ்சு சாம்சன் கேட்ச் டிராப் ஆனாலும் அதே ஓவரில் பும்ரா செய்த சம்பவம்.. என்ன நடந்தது?
சென்னை: 2026 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சதம் விளாசி மிரட்டி வந்த சஞ்சு சாம்சனை, மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீழ்த்தி அனுப்பினார். சேப்பாக்கத்தில் 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு சஞ்சு சாம்சன் விக்கெட்டால் ஆரம்பமே பின்னடைவாக அமைந்தது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 44வது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோர் களமிறங்கினர். மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் ஓவரை வீசிய டிரென்ட் போல்ட் 7 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

இதனைத் தொடர்ந்து ஆட்டத்தின் 2வது ஓவரை வீச மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா அழைக்கப்பட்டார். நடப்பு சீசனில் இதுவரை வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தி சற்று மோசமான ஃபார்மில் இருந்த பும்ராவிற்கும், ஏற்கனவே 2 சதங்கள் விளாசி உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கும் சாம்சனுக்கும் இடையிலான பலப்பரீட்சையை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருந்தனர்.
பும்ரா வீசிய முதல் பந்திலேயே சாம்சன் பேட்டில் எட்ஜ் ஆகி ஸ்லிப் திசையில் கேட்ச் சென்றது. ஆனால், அங்கு நின்றிருந்த வில் ஜாக்ஸ் அந்த மிக எளிதான கேட்ச்சை கைநழுவி தவறவிட்டார். இதனால் பும்ரா லேசான புன்னகையுடன் ஏமாற்றத்தை கடந்து சென்றார்.
தனக்கு கிடைத்த இந்த அதிர்ஷ்டமான வாய்ப்பை பயன்படுத்தி அதே ஓவரின் 5வது பந்தில் சாம்சன் ஒரு அட்டகாசமான பவுண்டரியை விளாசினார். ஆனால், பும்ரா அதற்கு அடுத்த பந்திலேயே தனது உண்மையான விஸ்வரூபத்தை காட்டினார். 6வது பந்தை பும்ரா சற்று ஷார்ட்டாக பவுன்சருடன் வீச, அதை சரியாக கணிக்க தவறிய சாம்சன் கால்களை நகர்த்தாமல் அப்படியே ஷாட் அடிக்க முற்பட்டார். அப்போது பந்து பேட்டின் வெளி விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் ரியான் ரிக்கல்டனிடம் சென்றது. அவர் வலதுபுறமாக பாய்ந்து 2 கைகளாலும் அந்த கேட்ச்சை மிக லாவகமாக பிடித்து அசத்தினார்.
இதனால் 9 பந்துகளில் 2 பவுண்டரிகளுடன் 11 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் சஞ்சு சாம்சன் மிகுந்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார். அதிரடி வீரர் சாம்சனை ஆரம்பத்திலேயே சுருட்டியதன் மூலம், கேட்ச்சை தவறவிட்ட வில் ஜாக்ஸ் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டார். பவர் பிளே ஓவரிலேயே சிஎஸ்கே அணியின் மிக முக்கிய விக்கெட்டை வீழ்த்தி பும்ரா கொடுத்துள்ள இந்த அதிர்ச்சி வைத்தியத்தால், மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் மிகுந்த உற்சாகமடைந்தனர். ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் பொறுப்பாக ஆடினார்.


Click it and Unblock the Notifications