மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய போட்டியில் ரச்சின் ரவீந்திரா விக்கெட்டை வீழ்த்த முக்கிய காரணமாக இருந்தார் இஷான் கிஷன். மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா, இஷான் கிஷன் பேச்சைக் கேட்டு ரிவ்யூ கேட்டார். ரிவ்யூவில் ரச்சின் அவுட் தான் என்பது தெரிய வந்தது.
2024 ஐபிஎல் தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சிஎஸ்கே - மும்பை இந்தியன்ஸ் போட்டியில் சிஎஸ்கே அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர்களாக ரஹானே - ரச்சின் ரவீந்திரா களமிறங்கினர். ரஹானே 8 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்து ருதுராஜ் கெய்க்வாட் - ரச்சின் ரவீந்திரா இணைந்து ரன் குவிப்பில் ஈடுபட்டனர். ஸ்ரேயாஸ் கோபால் வீசிய எட்டாவது ஓவரில் ரச்சின் ரவீந்திரா பந்தை அடிக்க முயன்று தவற விட்டார். பந்தை கேட்ச் பிடித்த மும்பை அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் அவுட் கேட்டார். ஆனால், அம்பயர் அவுட் தர மறுத்து விட்டார்.
ஆனால், பந்து பேட்டில் பட்ட சத்தம் தனக்கு கேட்டதாக இஷான் கிஷன் உறுதியாக கூறினார். அவர் பேச்சை நம்பிய கேப்டன் ஹர்திக் பாண்டியா சற்றும் யோசிக்காமல் ரிவ்யூ கேட்டார். ரிவ்யூவில் பந்து பேட்டில் பட்டது தெரிந்தது. இதை அடுத்து ரச்சின் ரவீந்திரா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகி வெளியேறினார்.
என்னதான் மும்பை இந்தியன்ஸ் அணி விக்கெட் வீழ்த்தினாலும் அடுத்து வந்த சிவம் துபே தன் அதிரடி ஆட்டத்தால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சை சிதற விட்டார். ருதுராஜ் கெய்க்வாட் 40 பந்துகளில் 69 ரன்கள் குவித்தார். சிவம் துபே 38 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார். தோனி கடைசி நான்கு பந்துகள் மட்டுமே பேட்டிங் செய்து மூன்று சிக்ஸ் அடித்து 20 ர ரன்கள் குவித்தார். சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது.