மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய வேகப் பந்துவீச்சாளர் இடம் பெற மாட்டார் என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் விளக்கம் அளித்து இருக்கிறார்.
2023 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் ஒருவர் வேகப் பந்துவீச்சாளர் மதீஷா பதிரானா. அவர் 2024 ஐபிஎல் தொடருக்கு முன்பே காயமடைந்தார். அதனால் அவர் சிஎஸ்கே அணியின் முதல் போட்டியில் பங்கேற்கவில்லை. அதன் பின் இரண்டு போட்டிகளில் ஆடிய அவர் 4 விக்கெட்கள் கைப்பற்றினார்.

அதன் பின் அவர் மீண்டும் காயம் காரணமாக இரண்டு போட்டிகளில் பங்கேற்கவில்லை. இந்த நிலையில் அவர் முக்கியமான மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர் குணமடைந்தாலும் 100 சதவீதம் தயாரான பின்னரே போட்டிகளில் பயன்படுத்த இருக்கிறோம் என சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளெம்மிங் கூறி இருக்கிறார்.
கடந்த போட்டியில் தீபக் சாஹரும் காயத்தில் சிக்கி இருந்தார். எனவே, சிஎஸ்கே அணி சரியான வேகப் பந்துவீச்சாளர்கள் கூட்டணி அமையாமல் சிக்கித் தவித்து வருகிறது. தற்போது முஸ்தாபிசூர் ரஹ்மான் மற்றும் துஷார் தேஷ்பாண்டே சிறப்பாக பந்து வீசி வருகிறார்கள். மூன்றாவதாக பதிரானாவும் அணிக்கு திரும்பினால் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சு முழு அளவில் பலம் பெறும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையிலான இந்த போட்டி ரசிகர்கள் மத்தியில் முக்கியமான போட்டியாக பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 36 போட்டிகளில் மோதி உள்ளன. அதில் மும்பை அணி 20 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.