மும்பை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா மோசமாக பந்து வீசினார். அப்போது ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில், தோனி சிக்ஸ் அடித்த போது ரோஹித் சர்மா செய்த விஷயம் ஒன்றை சுட்டிக் காட்டி ரசிகர்கள் அவரை விளாசி வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியில் சிஎஸ்கே அணி 186 ரன்கள் எடுத்து இருந்த நிலையில் 20வது ஓவரின் கடைசி நான்கு பந்துகள் மீதமிருந்த போது தோனி பேட்டிங் செய்ய வந்தார். அப்போது கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா வீசினார். ஹர்திக் பாண்டியா வேகப் பந்துவீச்சாளர் என்ற போதும் அவர் கடைசி ஓவர்களை வீசும் திறன் கொண்டவர் அல்ல.

எனினும், ஆகாஷ் மதவால் என்ற இளம் வேகப் பந்துவீச்சாளருக்கு மட்டுமே ஓவர் மீதமிருந்தது. அவரை நம்பாமல் ஹர்திக் பாண்டியா தானே பந்து வீசினார். களத்துக்கு வந்த தோனி பாண்டியா பந்துவீச்சில் தான் சந்தித்த முதல் பந்தை பெரிய சிக்ஸராக மாற்றினார். அப்போது ஃபீல்டிங்கில் நின்று இருந்த ரோஹித் சர்மா அதைக் கண்டு சிரித்தார்.
அந்த காட்சிகள் இணையத்தில் பகிரப்படு வருகின்றன. ரோஹித் சர்மா சிரித்ததை சுட்டிக் காட்டி தன் கேப்டன் பதவியை பறித்த ஹர்திக் பாண்டியா மீது கடும் அதிருப்தியில் இருக்கும் ரோஹித் சர்மா, அவர் ஓவரில் தோனி சிக்ஸ் அடித்ததை கண்டு வன்மத்தை வெளிப்படுத்தும் வகையில் சிரித்து இருக்கிறார் என சிலர் விமர்சனத்தை முன் வைத்துள்ளனர். என்னதான் ஹர்திக் பாண்டியா மீது நியாயமான கோபம் இருந்தாலும் கூட ஒரு அணிக்காக ஆடும் போது அவரை ஆதரிக்காமல், அணியின் நிலை மோசமாவதை எண்ணி கவலைப்படாமல் ரோஹித் சர்மா சிரித்துக் கொண்டு இருக்கிறார் எனவும் சிலர் கூறி உள்ளனர்.
அதே சமயம் தோனி சிக்ஸ் அடித்ததை கண்டு ரோஹித் சர்மா தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருக்கிறார் என தோனி ரசிகர்கள் அதை வேறு மாதிரியாக கூறி வருகின்றனர். ஆனால், இந்த தொடரில் இதற்கு முந்தைய போட்டிகளிலும் ஹர்திக் பாண்டியா எடுத்த தவறான முடிவுகளின் போதெல்லாம் ரோஹித் சர்மா அவரை கண்டு சிரித்த காட்சிகள் வெளியாகி இருந்தன.
ஹர்திக் பாண்டியா வீசிய அந்த கடைசி ஓவரில் தோனி தொடர்ந்து மூன்று சிக்ஸ் அடித்து நான்கு பந்துகளில் 20 ரன்கள் சேர்த்தார். ஹர்திக் பாண்டியா வீசிய அந்த கடைசி ஓவரில் மட்டும் 26 ரன்கள் சேர்த்தது சிஎஸ்கே அணி. சிஎஸ்கே அணி 206 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 186 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ரோஹித் சர்மா 105 ரன்கள் எடுத்தது மட்டுமே அந்த அணிக்கு ஆறுதலாக அமைந்தது.