CSK: சிஎஸ்கே-வுக்கு இனி கவலையே வேண்டாம்..14.2 கோடி வீரரின் பேட்டிங்.. யார் இந்த கார்த்திக் சர்மா?
சென்னை: 2026 ஐபிஎல் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14.2 கோடி ரூபாய்க்கு கார்த்திக் சர்மா வாங்கப்பட்டபோது யார் இந்த 20 வயது இளைஞர், இவ்வளவு பெரிய தொகை இவருக்கு எதற்கு என்ற கேள்விகள் பரவலாக எழுந்தன. ஆனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான மிக முக்கியமான போட்டியில் அந்த அத்தனை கேள்விகளுக்கும் தனது முதிர்ச்சியான ஆட்டத்தின் மூலம் பதிலளித்துள்ளார் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் புயல் கார்த்திக் சர்மா. அதிக விலைக்கு வாங்கப்பட்டதற்கான நியாயத்தை தனது முதல் அரைசதம் மூலம் நிரூபித்து, அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற அவரது ஆட்டம் தற்போது இணையத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
யார் இந்த கார்த்திக் சர்மா?
ராஜஸ்தான் மாநிலம் பரத்பூரைச் சேர்ந்த கார்த்திக் சர்மா, ஏப்ரல் 26, 2006 அன்று பிறந்தவர். இவர் அதிரடியாக விளையாடக்கூடிய வலதுகை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். உள்ளூர் கிரிக்கெட் தொடர்களான விஜய் ஹசாரே மற்றும் ரஞ்சி கோப்பைகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்களில் ஒருவராகத் திகழ்ந்தார். இவரது பேட்டிங் திறமையைப் பார்த்தே சிஎஸ்கே அணி இவரை 14.2 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய அன்கேப்டு வீரர் என்ற சாதனையையும் இவர் பிரசாந்த் வீர் என்பவருடன் இணைந்து பகிர்ந்துகொண்டார். மிகவும் சாதாரண குடும்பப் பின்னணியில் இருந்து வந்துள்ள இவருக்கு, இந்த ஐபிஎல் பயணம் பல நாள் கனவாகும்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மே 2 அன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக நடந்த போட்டியில் கார்த்திக் சர்மாவின் திறமை முழுமையாக வெளிப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 7 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. 160 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணிக்கு, மிடில் ஆர்டரில் வந்து பெரும் பலம் சேர்த்தார் கார்த்திக் சர்மா.
கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் உடன் இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்த அவர், மும்பை பந்துவீச்சாளர்களை எவ்வித பதற்றமும் இல்லாமல் எதிர்கொண்டார். மொத்தம் 40 பந்துகளைச் சந்தித்த அவர் 4 பவுண்டரிகள் மற்றும் 3 இமாலய சிக்ஸர்களுடன் 54 ரன்கள் குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். இது ஐபிஎல் தொடரில் அவரது முதல் அரைசதமாகும். சேஸிங்கிற்கு தேவையான அளவில் 135 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் அவர் விளையாடிய விதம் அணியின் வெற்றிக்கு வித்திட்டது.
மறுமுனையில் ருதுராஜ் 67 ரன்கள் எடுக்க, சிஎஸ்கே அணி 18.1 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 160 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மும்பைக்கு எதிரான இந்த முக்கிய போட்டியில் ஒரு இளம் வீரராக எந்தவித நெருக்கடியும் இன்றி, அதிரடி ஷாட்டுகளை ஆடியது மட்டுமின்றி, சிங்கிளாக ரன்களை எடுத்து கேப்டனுக்குத் தேவையான ஒத்துழைப்பைக் கொடுத்தார் கார்த்திக். ஒரு பினிஷராக அவருக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பை அவர் மிகச் சிறப்பாகச் செய்து முடித்ததன் மூலம், சிஎஸ்கே அணியின் எதிர்கால நம்பிக்கை நட்சத்திரமாக கார்த்திக் சர்மா உருவெடுத்துள்ளார்.


Click it and Unblock the Notifications