பல்லேகலே : 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த அணித் தேர்வில் சில வீரர்களை தேர்வு செய்யாமல் விட்டு கடினமான முடிவுகளை எடுத்து இருப்பது பற்றி கூறிய கேப்டன் ரோஹித் சர்மா, "இதெல்லாம் புதிது இல்லை" என அதிரடியாக கூறி இருக்கிறார்.
2023 உலகக்கோப்பை அணித் தேர்வு : அக்டோபர் 5 அன்று உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் துவங்க உள்ளது. அதற்கு 30 நாட்கள் முன்பாக இந்திய அணி அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்திய அணித் தேர்வுக் குழு தலைவர் அஜீத் அகர்க்கர் மற்றும் கேப்டன் ரோஹித் சர்மா இலங்கையில் ஆசிய கோப்பை நடைபெறுவதால் அங்கேயே சந்தித்து அணித் தேர்வை இறுதி செய்தனர்.

இந்திய அணி விவரம் : அவர்கள் அறிவித்த இந்திய அணி விவரம் - ரோஹித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், இஷான் கிஷன், கே எல் ராகுல், ஹர்திக் பாண்டியா, சூரியக்குமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்குர், ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ், குல்தீப் யாதவ்.
விடுபட்ட வீரர்கள் : இந்த பட்டியலில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சுழற் பந்துவீச்சாளர் சாஹல், ஷிகர் தவான், பிரசித் கிருஷ்ணா, சஞ்சு சாம்சன், இந்திய சூழலில் விளையாட அஸ்வின் ஆகியோர் இடம் பெறவில்லை. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு கேப்டன் ரோஹித் சர்மா அதிரடியான பதிலைக் கூறினார்.
ரோஹித் பேச்சு : "அணியின் 11 இடங்களில் இடம்பெற வீரர்கள் போட்டி போடுவது நல்ல விஷயம் தான். சில வீரர்கள் விடுபடுவது ஒன்றும் புதிய விஷயமல்ல. நாங்கள் சில கடினமான முடிவுகளை எடுக்க வேண்டி வந்தது" என கூறி இருக்கிறார்.
அகர்க்கர் பேச்சு : அணித் தேர்வுக்குழு தலைவர் அஜீத் அகர்க்கர் கூறுகையில், இந்த 15 வீரர்கள் கொண்ட பட்டியலில் எந்த மாற்றமும் இருக்காது என்றார். யாருக்காவது காயம் ஏற்பட்டால் மட்டுமே அணியில் மாற்றம் இருக்கும் என்றார்.