கேப்டன்ஸ் மீட்.. என்னைய பார்த்து அப்படியொரு கேள்வி ஏன் கேட்டீங்க.. கொந்தளித்த கேப்டன் ரோகித் சர்மா!
அகமதாபாத்: 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் பவுண்டரி கணக்கு அடிப்படையில் இங்கிலாந்து அணியை வெற்றியாளாராக தேர்வு செய்தது சரியா என்று ரோகித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இந்தியாவில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. 45 நாட்கள், 48 போட்டிகள், 10 மைதானங்கள், 10 அணிகள், 150 வீரர்கள் என்று உலகக்கோப்பை தொடர் திருவிழாவாக கொண்டாட்டம் தொடங்கவுள்ளது. இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை எதிர்த்து நியூசிலாந்து அணி விளையாடுகிறது. கடந்த முறை இந்த இரு அணிகளும் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் மோதின.

அப்போது நியூசிலாந்து அணியை பவுண்டரி கணக்கில் இங்கிலாந்து அணி வீழ்த்தி முதல்முறையாக உலகக்கோப்பையை வென்றது. அப்போது முதலே வெற்றியாளரை பவுண்டரி கணக்கில் தேர்வு செய்தது சரியா என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதன் காரணமாக சூப்பர் ஓவரும் "டை" ஆகும் பட்சத்தில் மீண்டும் சூப்பர் ஓவர் நடத்தப்படும் என்று விதிகள் கொண்டு வரப்பட்டது.
இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரை முன்னிட்டு நேற்று அகமதாபாத்தில் கேப்டன்ஸ் டே நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் உலகக்கோப்பை தொடரில் விளையாடும் 10 அணிகளின் கேப்டன்களும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியை ரவி சாஸ்திரி மற்றும் இயன் மோர்கன் இருவரும் தொகுத்து வழங்கினர். இதனையடுத்து பத்திரிகையாளர்கள் தரப்பிலும் கேள்விகள் எழுப்பப்பட்டது.
அப்போது பத்திரிகையாளர் ஒருவர் எழுந்து கடந்த உலகக்கோப்பை தொடரில் பவுண்டரிகள் அடிப்படையில் வெற்றியாளரை தீர்மானித்து இங்கிலாந்து அணியிடம் கோப்பையை வழங்கியது சரியா? உங்களின் கருத்து என்ன? என்று கேள்வி எழுப்பினார். அப்போது மேடையிலேயே பட்லர் மற்றும் வில்லியம்சன் இருவரும் அமர்ந்திருந்ததால், ரோகித் சர்மா என்ன பதில் சொல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதற்கு ரோகித் சர்மா தரப்பில், வெற்றியாளர் யார் என்று அறிவிக்கும் இடத்தில் நானும் இல்லை. அது எனது வேலையும் இல்லை என்று இந்தியில் பதில் அளித்தார். அப்போது ரோகித் சர்மாவின் பதிலை ஆங்கிலத்தில் பட்லரிடம் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் விளக்கினார். ரோகித் சர்மாவின் பதில் அந்த அரங்கத்தில் அமர்ந்திருந்தவர்கள் மத்தியில் சிரிப்பை வரவழைத்தது.


Click it and Unblock the Notifications