டெல்லி : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் டெல்லி அணி கடந்த மூன்று சீசன் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் இம்முறை அணியின் கேப்டன் ரிஷப் பந்த் இல்லாததால் தற்போது கடைசி இடத்தில் இருக்கிறார்கள். இந்தத் தொடரில் ரிஷப் பண்ட் இல்லாதது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு டெல்லி அணியின் மென்டராக கங்குலி இருந்தார். ஆனால் அதன் பிறகு பி சி சி ஐ தலைவர் பொறுப்பை ஏற்றதால் அவரால் அந்த பணியில் ஈடுபட முடியவில்லை. தற்போது மீண்டும் டெல்லி அணிக்கு கங்குலி திரும்பி இருக்கிறார்.

இதனால் கடந்த முறை சிறப்பாக விளையாடிய டெல்லி இம்முறை ஒரு வீரர் இல்லாமல் தான் இப்படி தடுமாறியதா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும் ரிக்கி பாண்டிங் பயிற்சியில் கங்குலி தேவையில்லாமல் தலையிடுகிறார் என்ற சர்ச்சையும் இருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள ரிக்கி பாண்டிங் எனக்கு சரி சமமான போட்டியாளராக கங்குலி என்றுமே இருந்திருக்கிறார்.
ஆனால் என்னை விட ஸ்டீவ் வாக்- கங்குலி இடையே தான் கேப்டன் ஆக இருந்தபோது நல்ல போட்டி இருந்திருக்கும். நான் கேப்டனாக இருந்தபோது 2003 உலகக் கோப்பை இறுதி போட்டியில் தான் கங்குலியை சந்தித்தேன். நாங்கள் இருவரும் ஒருவர் ஒருவர் நிறைய விளையாடி இருக்கிறோம். கங்குலி 2019 ஆம் ஆண்டு டெல்லி அணிக்கு வந்த பிறகு எங்கள் அணியில் பல மாற்றங்கள் நடந்தது. ஆனால் அதன் பிறகு அவர் இதைவிட பெரிய பதவிக்கு சென்று விட்டார்.
தற்பொழுது மீண்டும் வந்திருக்கிறார். நாங்கள் இருவரும் ஒன்றாகவே செயல்பட்டோம். ஏனென்றால் அணியின் நன்மை தான் எங்களுக்கு முக்கியம் என்று கருதினோம். அணியின் வெற்றிக்காக நாங்கள் இருவரும் சேர்ந்து பல விஷயங்களில் பணியாற்றினோம். நாங்கள் நல்ல நண்பர்களோ, இல்லையோ, ஒரு அணியாக நீங்கள் பணியாற்றும்போது அனைவரும் ஒன்றிணைந்து ஒரே நோக்கத்திற்காக ஒரே வழியில் சென்றால் மட்டுமே வெற்றி பெற முடியும்.
நடந்த பழைய கதை எல்லாம் விட்டு விட வேண்டும். எது நடந்ததோ அது நடந்து விட்டது. ஐபிஎல் தொடரில் எனக்கு பிடித்தது இதுதான். நானும் ஹர்பஜனும் களத்தில் ஒருவர் ஒருவர் மோதிக் கொள்வோம். ஆனால் மும்பை அணியில் நான் கேப்டனாக இருந்த போது எனக்கு கீழ் ஹர்பஜன் விளையாடினார். அவர் பந்து வீசும் போது நான் கேட்ச் பிடித்தால் இருவரும் கட்டிக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்துவோம். ஒரு காலத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் இரு அணி வீரர்களுக்குள் எப்போதுமே பகை இருக்கும். ஆனால் ஐபிஎல் அனைத்தையும் மாற்றிவிட்டது என்று ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.