டெல்லி: 2025 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேல் செய்த தவறுக்காக அவருக்கு பிசிசிஐ தண்டனை அளித்துள்ளது. அவருக்கு 12 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதிய போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் ஐந்து விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது. மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக விளையாடிய நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி திட்டங்களை தீட்டுவதற்கும், ஃபீல்டிங்கை மாற்றுவதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொண்டது. அதனால் குறிப்பிட்ட நேரத்திற்குள் டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் 20 ஓவர்களையும் வீசி முடிக்க முடியவில்லை.

இதை அடுத்து, ஸ்லோ ஓவர் ரேட் என்ற விதியின்படி, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் அக்சர் படேலுக்கு ஐபிஎல் விதிமுறைகளின் கீழ் 12 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி செய்யும் முதல் ஸ்லோ ஓவர் ரேட் தவறு என்பதால், அவருக்கு முதல் முறை குற்றமாகக் கருதப்பட்டு 12 லட்ச ரூபாய் மட்டும் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.
மீண்டும் இதே தவறு நடந்தால், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டனுக்கு 24 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 205 ரன்கள் சேர்த்த நிலையில், டெல்லி கேப்பிடல்ஸ் அணி அந்த இலக்கை நோக்கி வேகமாக முன்னேறி வந்தது.
ஆனால், 19வது ஓவரில் மூன்று பேட்ஸ்மேன்கள் ரன் அவுட்கள் ஆனதால் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 193 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் கருண் நாயர் சிறப்பாக விளையாடி 40 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்திருந்தார். 12 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களை விளாசினார். மற்ற பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மும்பை இந்தியன்ஸ் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.