வாங்க சேர்ந்து கோப்பையை கைப்பற்றலாம்... ரசிகர்களை விரும்பி அழைத்த ஷ்ரேயாஸ் ஐயர்!
டெல்லி : ஐபிஎல் 2021 சீசனுக்காக அணிகள் மட்டுமின்றி ரசிகர்களுக்கு காத்திருக்கின்றன. இதற்கான தேதி மற்றும் இடம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் 2021 தொடருக்கான ஏலம் சென்னையில் நடைபெற்றது. இதில் டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஸ்மித், குர்ரான் உள்ளிட்ட சில வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதிய வீரர்கள் அணிக்கு பலத்தை கூட்டியுள்ளதாகவும், இந்த புதிய அணியை கொண்டு போட்டிகளை எளிமையாக்கிக் கொண்டு வெற்றியை வசப்படுத்த வேண்டும் என்றும் அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த ஏலம்
ஐபிஎல் 2021 தொடர் வரும் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை பிசிசிஐ மேற்கொண்டாலும், ஐபிஎல் நடைபெறும் தேதிகள் மற்றும் இடம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. ஆனால் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் 2021 ஏலம் சென்னையில் நடந்து முடிந்துள்ளது.

அணியை பலப்படுத்திய டெல்லி அணி
இந்த ஏலத்தில் தங்களது அணியை பலப்படுத்திக் கொள்ளும்வகையில், பணத்தை கருத்தில் கொள்ளாமல் அனைத்து அணிகளும் போட்டிப் போட்டுக் கொண்டு, உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்தன. இதேபோல கடந்த சீசனின் ரன்னர் அப் அணியான டெல்லி கேபிடல்ஸ் அணியும் சில வீரர்களை ஏலத்தில் எடுத்து அணியை பலப்படுத்தியுள்ளது.

வலிமையான டெல்லி கேபிடல்ஸ்
ஸ்டீவ் ஸ்மித், டாம் குர்ரான் போன்ற வெளிநாட்டு வீரர்களையும் லுக்மன் மேரிவாலா, ரிபால் படேல், விஷ்ணு வினோத் மற்றும் மணிமாறன் சித்தார்த் போன்ற இந்திய வீரர்களையும் டெல்லி கேபிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. இதன்மூலம் டெல்லி கேபிடல்சின் புதிய அணி வலிமை மிக்கதாக மாறியுள்ளது.

புதிய வீரர்கள் அனுபவம்
இந்நிலையில் ஸ்மித் மற்றும் குர்ரானின் அனுபவம் அணிக்கு மிகச்சிறந்த பலமாக அமையும் என்று அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தங்களுடைய அணி மிகச்சிறந்த வலிமையுடன் தொடரை எதிர்கொள்ள இருந்தாலும், அனைத்து அணிகளும் தங்களை பலப்படுத்தியுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

ஷ்ரேயாஸ் ஐயர் நம்பிக்கை
இதையடுத்து இந்த சீசன் மிகவும் சிறப்பானதாக அமையும் என்றும் ஷ்ரேயாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதனால் டெல்லி கேபிடல்சின் புதிய அணி அனைத்தையும் எளிமையாக்கிக் கொண்டு போட்டிகளை எதிர்கொள்ளும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரசிகர்களுடன் வெற்றி கொண்டாட்டம்
மேலும் கடந்த சீசனை போல இல்லாமல் இந்த சீசனில் தங்களை ஊக்குவிக்க ரசிகர்கள் இருப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் இந்த சீசனில் கோப்பையுடன் ரசிகர்களை எதிர்கொள்ளவுள்ளதாகவும், வெற்றியை ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட திட்டமிட்டுள்ளதாகவும் ஐயர் மேலும் கூறினார்.


Click it and Unblock the Notifications