கவுகாத்தி: டெல்லி அணிக்காக இம்பேக் பிளேயராக களமிறங்கிய இளம் தொடக்க வீரர் பிரித்வி ஷா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார். ராஜஸ்தான் அணிக்காக ஆடிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் அதிரடி அரைசதம் விளாசிய நிலையில், ரன் எடுக்காமல் பிரித்வி ஷா ஆட்டமிழந்ததால் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
16வது சீசனுக்கு 11வது லீக் போட்டியில் ராஜஸ்தான் அணியை எதிர்த்து டெல்லி அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் அணி இளம் வீரர் ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது. கவுகாத்தி மைதானத்தில் 200 ரன்கள் இலக்கு எட்டக் கூடியது என்பதால், ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து டெல்லி அணி சார்பாக இம்பேக்ட் பிளேயராக கலீல் அஹ்மத்திற்கு பதிலாக இளம் வீரர் பிரித்வி ஷா களமிறங்கினர். வழக்கம் போல் பிரித்வி ஷா - டேவிட் வார்னர் கூட்டணி தொடக்க வீரர்களாக களமிறங்கியது. ராஜஸ்தான் அணி தரப்பில் இடது வேகப்பந்துவீச்சாளராக போல்ட் முதல் ஓவரை வீசினார். கடந்த இரு போட்டிகளில் பிரித்வி ஷா பெரிய ஸ்கோரை எடுக்காததால், இன்றைய பிளேயிங் லெவனில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.
இதனால் இன்றையப் போட்டியில் தனது திறமையை நிரூபிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் போல்ட் வீசிய முதல் ஓவரின் மூன்றாவது பந்தில் விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சனின் அசத்தலான கேட்ச்சால் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து மனீஷ் பாண்டேவும் அடுத்த பந்தில் ஆட்டமிழந்து வெளியேற, டெல்லி அணி ரன் ஏதும் எடுக்காமலேயே இரு முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. இதனால் பிரித்வி ஷா பேட்டிங்கை ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு முன்பாக டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங், இந்த ஐபிஎல் தொடரில் பிரித்வி ஷா தனது முழு திறமையை நிரூபிப்பார். சிறந்த ஃபார்மில் இருக்கும் பிரித்வி ஷா , ஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் இருப்பார் என்று எக்கச்சக்க பில்டப் கொடுத்தார். ஆனால் ஒவ்வொரு போட்டியிலும் ஸ்விங், பவுன்சர் பந்துகளுக்கு அவர் அடுத்தடுத்து ஆட்டமிழந்துள்ளார். இதனால் பிரித்வி ஷா தனது பேட்டிங்கில் உள்ள பிரச்சனையை இன்னும் சரி செய்யவில்லை என்பது தெரிய வந்துள்ளது.