டபுள் செஞ்சுரி வாய்ப்பை பறித்த அம்பயர்.. களத்திலேயே ஆவேசமான தேவ்தத் படிக்கல்.. பெரும் சர்ச்சை
லிங்கன்: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக லிங்கனில் நடைபெற்ற முதல் அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில், இந்திய ஏ அணியின் நட்சத்திர இடதுகை பேட்டர் தேவ்தத் படிக்கல் 199 ரன்கள் எடுத்திருந்த போது அம்பயரின் சர்ச்சைக்குரிய தவறான தீர்ப்பால் ஆட்டமிழந்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பேட்டில் பந்தே படாத நிலையிலும் அம்பயர் அவுட் கொடுத்ததால், வெறும் 1 ரன்னில் தனது இரட்டை சதத்தைத் தவறவிட்ட படிக்கல், களத்திலேயே அம்பயரிடம் ஆவேசமாகக் கொந்தளித்தார்.
பெர்ட் சட்க்ளிஃப் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 3-வது நாளில், தேவ்தத் படிக்கல் 199 ரன்களுடன் இரட்டை சதத்தின் விளிம்பில் நின்றார். அப்போது நியூசிலாந்து ஏ அணி வேகப்பந்து வீச்சாளர் ஜாக் கிப்சன் வீசிய வைடு பந்தை தேவ்தத் படிக்கல் அடிக்க முயன்றார். பந்து பேட்டில் படாமல் விக்கெட் கீப்பர் மிட்செல் ஹேயிடம் தஞ்சம் புகுந்தது. ஆனால் பந்து பேட்டில் உரசியதாகக் கூறி அம்பயர் உடனடியாக அவுட் கொடுத்தார்.

அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டி என்பதால் இதில் டிஆர்எஸ் மறுஆய்வு வசதி கிடையாது. பந்துக்கும் பேட்டுக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தபோதும் அம்பயர் தீர்ப்பை மாற்றாததால், தேவ்தத் படிக்கல் கடும் ஏமாற்றத்துடன் தலையை அசைத்தார். அம்பயரிடம் அவுட் இல்லை என்று கூறினார். எனினும், முடிவை மாற்ற முடியாததால் மைதானத்தை விட்டு வெளியேறினார்.
முதல் இன்னிங்ஸில் வெறும் 113 ரன்களுக்குச் சுருண்ட இந்திய ஏ அணி, நியூசிலாந்து ஏ அணி எடுத்த 317 ரன்களால் 204 ரன்கள் பின்தங்கியிருந்தது. இந்த இக்கட்டான சூழலில் 2-வது இன்னிங்ஸில் தூணாக நின்ற தேவ்தத் படிக்கல், தமிழக வீரர் சாய் சுதர்சனுடன் இணைந்து 3-வது விக்கெட்டுக்கு 215 ரன்கள் குவித்தார். சாய் சுதர்சன் 91 ரன்கள் குவித்து இருந்தார். பின்னர் யாஷ் ரத்தோட்டுடன் (66 ரன்கள்) இணைந்து 5-வது விக்கெட்டுக்கு 142 ரன்கள் சேர்த்து அணியை இன்னிங்ஸ் தோல்வி ஆவதில் இருந்து மீட்டெடுத்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலும் 167 மற்றும் 117 ரன்கள் விளாசிய தேவ்தத் படிக்கல், தற்போது மீண்டும் ஒருமுறை பெரிய இன்னிங்ஸ் ஆடி தனது அசைக்க முடியாத ஃபார்மை நிரூபித்துள்ளார். வரும் நவம்பர் 19 அன்று நியூசிலாந்துக்கு எதிராகத் தொடங்கும் டெஸ்ட் தொடருக்கு பயிற்சி அளிக்கும் வகையில் நடந்த இந்த போட்டியில் தேவ்தத் படிக்கல்லின் அதிரடி ஆட்டம் இந்திய அணிக்கு மாபெரும் பலமாக அமைந்துள்ளது.


Click it and Unblock the Notifications

