ஜெய்ஸ்வால் 0, சாய் சுதர்சன் 41, படிக்கல் 80.. நியூசிலாந்து ஏ அணிக்கு எதிராக இந்தியா ஏ திணறல்
கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்து ஏ அணிக்கு எதிரான 2-வது அதிகாரப்பூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இந்தியா ஏ அணிக்காக அபாரமாக ஆடிய தேவ்தத் படிக்கல் 80 ரன்கள் விளாசி அசத்தினார். அதே சமயம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி பெருத்த ஏமாற்றம் அளித்தார். நியூசிலாந்தின் கிறைஸ்ட்சர்ச்சில் உள்ள ஹேக்லி ஓவல் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெற்று வருகிறது.
முதல் போட்டியில் 199 ரன்கள் குவித்து 1 ரன்னில் இரட்டை சதத்தை தவறவிட்ட படிக்கல், தனது சிறப்பான பார்மை இந்த ஆட்டத்திலும் தொடர்ந்தார். 3-வது வரிசையில் களமிறங்கிய அவர் 140 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 80 ரன்கள் குவித்தார். பொறுப்புடன் ஆடிய அவர் 100 பந்துகளில் அரைசதம் கடந்தார். 2-வது விக்கெட்டுக்கு சாய் சுதர்சனுடன் இணைந்து 91 ரன்கள் சேர்த்தார். சாய் சுதர்சன் 41 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இதன் மூலம் நியூசிலாந்துக்கு எதிரான சீனியர் டெஸ்ட் அணியின் பிளேயிங் 11-ல் தனக்கான இடத்தை படிக்கல் மேலும் வலுப்படுத்தியுள்ளார்.

மறுபுறம் இந்திய அணியின் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு இந்த நாள் மிகவும் மோசமாக அமைந்தது. பிரேசர் ஷீட் வீசிய முதல் ஓவரிலேயே 4 பந்துகளைச் சந்தித்த ஜெய்ஸ்வால் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட்டாகி வெளியேறினார். முதல் டெஸ்ட் போட்டியிலும் அவர் 17 மற்றும் 5 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது. அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஸ்மரன் ரவிச்சந்திரனும் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் அவுட்டானார். முதல் டெஸ்டில் சிறப்பாக ஆடிய யஷ் ரத்தோட் 13 ரன்களில் நடையைக் கட்டினார்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன் பயிற்சி அளிக்கும் வகையில் நடக்கும் இந்தியா ஏ மற்றும் நியூசிலாந்து ஏ அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகின்றன. துருவ் ஜூரல் தலைமையிலான இந்தியா ஏ அணியில் முகமது சிராஜ், மானவ் சுதர் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் பிளேயிங் 11-ல் சேர்க்கப்பட்டுள்ளனர். கேஎல் ராகுல் மற்றும் அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் ஒருநாள் தொடருக்காக சீனியர் அணியுடன் இணைந்துவிட்டதால் இந்தப் போட்டியில் களமிறங்கவில்லை.


Click it and Unblock the Notifications


